வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறீர்கள்.
I have written to you, young men, Because you are strong, and the word of God abides in you, (1John 2:14)
Ephesians 6:10; Philippians 4:13; Colossians 1:11; 2Timothy 2:1; Psalm127:5; 2Corinthians 12:9,10; Hebrew 11:34.
பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். (1 யோவான் 2:14)
எபேசியர் 6:10; பிலிப்பியர் 4:13; கொலோசெயர் 1:11; 2தீமோத்தேயு 2:1; சங்கீதம் 127:5; 2கொரிந்தியர் 12:9,10; எபிரெயர் 11:34.
பலவான்கள்.
வாலிபர்கள் பலவான்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகின்றார் ஆக்கியோன். கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, தங்களை பாவிகள் என்று உணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, அவருக்கு சாட்சிகளாக இருப்பவர்கள் மாம்சத்தில் பலவீனர்களாக காணப்பட்டாலும் ஆவியிலே பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் இரட்சிக்கப்பட்ட இவர்கள் இயேசு கிறிஸ்துவின் ஜீவனையும், தேவனுடைய ஆவியையும் உளமார பெற்று பலத்தின்மேல் பலமடைந்தார்கள்.
ஆவியிலே பெலமடைந்த இவர்களில் தேவனுடைய வார்த்தை நிலைத்திருக்கிறது. ஆவி இருக்கும் இடத்தில் வசனமும், வசனம் இருக்கும் இடத்தில் ஆவியும் நிலைத்திருக்க வேண்டும். ஆவியிலே நிரம்பி வழியும் அனுபவம் கொண்டிருப்பவர்களில் தேவ வசனம் நிலைத்திராவிட்டால் தேவ ஆவியானவரும் அங்கிறார். ஆவியிலே பலமடைந்த மனிதனில் வசனம் மெய்யாய் நிலைத்திருக்கும்போது பாவங்களுக்கு எதிராகவும், ஆகாயமண்டல ஆவிகளுக்கு எதிராகவும், இவ்வுலக லோகாதிபதிகளுக்கு எதிராகவும் ஆவியின் பட்டயமாகிய தேவ வசனத்தை வீசமுடியும். அநேகருடைய பட்டயங்கள் கூரில்லாமலும், எதிராளியை தாக்கி அழிக்க இயலாமலும் இருக்க காரணம் தேவனுடைய ஆவியை கொண்டிராததுவேயாகும்.
வசனத்தை தனக்குள் நிலைத்திருக்க விடாதிருக்க காரணம் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகும். ஐசுவரியத்தின் மயக்கமும் வசனம் நம்மில் நிலைத்திருந்து மிகுந்த கனி கொடுக்க இயலாமல் செய்கிறது. ஒருவிதத்தில் இது சாத்தானுடைய தந்திரமாகும். இரட்சிக்கப்பட்டவர்களில் மாம்சீகத்தை (கோபம், எரிச்சல், சண்டை,பேராசை) செயல்பட வைத்து தனது வேலையை செய்துக் கொண்டிருக்கின்றான். ஆகையினால் பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டுமெனில் வசனமும் ஆவியும் இணைந்த வாழ்க்கை வேண்டும்.
பிசாசானவன் பொல்லாப்பு செய்கிறவனாகவே இருக்கிறான். நன்மை செய்யும் குணம் அவனில் இல்லை. அவனை நம்புகிறவர்களுக்கும் அவன் நன்மை செய்வதில்லை. தான் அவர்களுக்கு நன்மை செய்வதை போன்று நாடகமாடுகின்றான். இந்த பொலாங்கனை தேவனுடைய ஆவியினாலும் தேவனுடைய வார்த்தையினாலும் ஜெயிக்கிறவர்களே வாலிபர்களாயிருக்கிறார்கள். வாலிபர்களாகிய இவர்கள் ஜெயித்தால் மட்டுமே பிதாக்களாக பரிணமிக்க முடியும்.
பலவான்கள்…..
தேவனுடைய ஆயுதங்களாக இருக்கிறார்கள்.
மாம்சத்தோடும், பாவத்தோடும், உலகத்தோடும் உடன்படிக்கை செய்யாமல் அவைகளுக்கு எதிராக போராடுவார்கள்.
பிசாசின் கோட்டைகளை இடிக்கவும், பாழாய்போன பட்டணங்களை கிறிஸ்துவுக்குள் குடியேற்றுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
சில கேள்விகள்….
ஆவியிலே பலமடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் பூமியில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது அவர்களுக்கு எதிராக கட்சிகளையும், இயக்கங்களையும் நாடிப்போவதின் பொருள் என்ன?
என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:10-12.