நீர் இராஜாவோ, நீர் சொல்லுகிறபடி நான் இராஜாதான்.
Pilate Are You a king then?.Jesus You say rightly that I am a king. (John 18:37)
Matthew 26:64; Matthew 27:11; Mark 15:2; Luke 23:3; 1 Timothy 6:15,16; Revelation 1:5; Revelation 11:15; Revelation 19:16; Proverb 8:15; Isaiah 6:5; Isaiah 32:1.
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:37)
மத்தேயு 26:64; மத்தேயு 27:11; மாற்கு 15:2; லூக்கா 23:3; 1தீமோத்தேயு 6:15,16; வெளி 1:5; வெளி 11:15; வெளி 19:16; நீதிமொழிகள் 8:15; ஏசாயா 6:5; ஏசாயா 32:1.
நான் இராஜாதான்:
பிலாத்துவின் கேள்விக்கு பதிலாக நான் இராஜாவேதான் என்று இயேசு பகிரங்கமாக பதிலளிக்கின்றார். என் இராஜ்யம் இவ்வுலகிற்குரியதும், இவ்விடத்துக்குரியதுமல்லாத புதிய இராஜ்யம். அது ஆயிரம் வருடங்கள் நீண்ட ஒரு நீட்சியைக் கொண்ட இராஜ்யம். அதில் நான் இராஜாவாக வீற்றிருந்து அரசாளுவேன். எல்லா இராஜ்யங்களும், ராஜாக்களும் எனக்கு அடங்கி என்னைப் பணிந்துக் கொள்வார்கள். எல்லாருடைய முழங்கால்களும் என் முன்பாக முடங்கும். எல்லா நாவுகளும் இயேசுவே இராஜா என்று அறிக்கையிடும் என்று அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகின்றார்.
பிலாத்துவே உம்முடைய இராஜ்யமோ, நரியாகிய ஏரோதின் இராஜ்யமோ இப்பொழுது எனக்கு தேவையில்லை. இப்பொழுது நீர் கலக்கமில்லாமல் ஆட்சி செய்யலாம். இப்பொழுது நான் மனித மனங்களில் ஆட்சி செய்யும்படியாகவும், அதன்மூலம் தேவனுடைய இராஜ்யத்தை எங்கும் ஸ்தாபிக்கவும் முயற்சிக்கின்றேன். இந்த என்னுடைய ஆட்சியையும், அதன் விரிவாக்கத்தையும் நீரோ, இஸ்ராயேலரோ அல்லது உலகின் எந்த சக்தியும் தடுத்த நிறுத்தவியலாது என்று உள்ளீடாக கூறுகின்றார்.
இயேசுவே ஆண்டவர், இயேசுவே இரட்சகர், இயேசுவே மெய்த்தேவன் என்ற நாமங்களினூடே இயேசுவே ராஜா என்ற ஸ்லோகமும் தொனித்துக் கொண்டேயிருக்கின்றது. மனித உள்ளங்களை ஆளுகை செய்யும் இராஜா, கிறிஸ்துவின் குடும்பங்களில் ஆளுகை செய்யும் இராஜா, சபைகளில் ஆளுகை செய்யும் இராஜா, மனிதர்களோடு யுத்தம் செய்யாத இராஜா, நாடுகளோடு யுத்தம் செய்யாத இராஜா, பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ, முதல்வராகவோ, ஆளுநராகவோ, மந்திரியாகவோ ஆக விரும்பாத இராஜா.
இருளை எதிர்த்து போராடும் ஒளியின் பிள்ளைகளையுடைய ஒளியின் இராஜா. பாவங்களை எதிர்த்து போராடும் பரிசுத்தவான்களின் சந்ததியையுடைய பரிசுத்த இராஜா. சாத்தானை எதிர்த்து போராடும் சபைகளையுடைய மகிமையின் இராஜா, தீமைகளை எதிர்த்து போராடும் நன்மையின் நாற்றுகளையுடைய நன்மையின் இராஜா, மரணத்தை எதிர்த்து போராடும் ஜீவனுள்ள பிள்ளைகளையுடைய நித்திய இராஜா. இவரே நம் இராஜா. சபைகளின் இராஜா, குடும்பங்களின் இராஜா. இவரையே பின்பற்றுவோம். இவரையே பிரசங்கிப்போம்.
மண் நோக்கி இறங்கும் இராஜாவல்ல இவர்,
விண் நோக்கி எழும்பிச் செல்லும் இராஜா.
இயேசு ராஜாவே சீக்கிரம் வருவீராக.
அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது, என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான். தானியேல் 4:34-37.