நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் கேட்ட பழைய கற்பனையையே எழுதுகிறேன்
The old commandment is the word which you heard from the beginning. (1John 2:7)
Levitics 19:18,34; Deu 6:5; Matthew 5:43; Matthew 22:37-40; Mark 12:29-34; Romans 13:8-10; Galathians 5:13,14; James 2:8-12.
சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன். அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே. (1 யோவான் 2:7)
லேவியராகமம் 19:18,34; உபாகமம் 6:5; மத்தேயு 5:43; மத்தேயு 22:37-40; மாற்கு 12:29-34; ரோமர் 13:8-10; கலாத்தியர் 5:13,14; யாக்கோபு 2:8-12.
பழைய கற்பனை.
இங்கே புதிய கற்பனையை அல்ல பழைய கற்பனையையே எழுதுகிறேன் என்றும் அந்த கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தான் என்றும் கூறுகின்றார். 1:1 ல் ஆதிமுதல் என்ற வார்த்தை வருகிறதாகையினால் இங்கேயும் அதே பொருளைதான் குறிக்கும் எனலாம். இதனை இருவிதங்களில் விளக்கலாம். யோவான் குறிப்பிடக்கூடிய கற்பனை அன்பின் கற்பனையேயாகும். இந்த அன்பின் கற்பனை இரு விதங்களில் சொல்லப்படலாம்.
முதலாவது, பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள அன்பின் பிரமாணம். நியாயபிரமாணங்கள் கடினமானதும், பாரமானதும் என்று கூறப்படும் அதே நேரத்தில் அங்கே அன்பின் பிரமாணமும் வைக்கப்பட்டுள்ளதையும் கவனிக்குக. கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவன் தேவனிடத்தில் அன்பு கூருகிறவனாயிருக்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லா பிரமாணங்களும் அன்பை மையமாகக் கொண்டே இயங்குகின்றது. தேவன் மனிதர்களை மீட்டெடுக்க கற்பனைகளைக் கொடுத்திருந்தாலும் அன்பே அதற்கு காரணமாயிருந்தது. ஆகையினால்தான் அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன் என்று கூறுகின்றார். பாவிகள் கற்பனைகளின்படியாக தங்களைப் பாவியென்று ஒப்புக்கொண்டு இயேசு கிறிஸ்துவினால் கிடைக்கும் மீட்பை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அன்பை கொண்டிருப்பவர்களுக்கு சடங்கு சாராத பிரமாணங்கள் பாரமானவைகளாக தெரியாது.
இரண்டாவது, பழைய கற்பனை என்பது ஆதியில் இயேசு போதித்த கற்பனையாகும். இது ஆதிமுதல் கேட்டதாகவும், அறிந்ததாகவும், ஏற்றுக்கொண்டதாகவும் உள்ளது. இயேசு கிறிஸ்து பழைய உடன்படிக்கையின் பிரகாரம் வந்திருந்தாலும் புதிய உடன்படிக்கையையும் கொடுத்தார். இயேசு கொடுத்த பிரமாணங்களும் கற்பனைகளும் புதியவைகளாயிருக்க காரணம் சடங்குகள் இல்லாது தன்னையே பலியாக கொடுத்ததினால் உண்டானதாகும். பழைய கற்பனையின் பொருளாகிய அன்பையே இயேசுவும் போதித்தார். ஆகையினால் இது பழைய கற்பனையாகவும் அறியப்படுகின்றது. பழைய ஏற்பாட்டின் கற்பனைக்கு மிருகபலி கொடுக்கப்பட்டு அன்பு வெளிபடுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் கற்பனைக்கு இயேசுவே பலியாக ஒப்புகொடுக்கப்பட்டு அன்பு வெளிபடுத்தப்படுகிறது.
அன்பு காலத்துக்கு காலம் மாறுபடுவதில்லை. பழைய கற்பனையின் பொருளாகிய அன்பும், இயேசு போதித்த கற்பனையின் பொருளாகிய அன்பும் ஒன்றே.
பழைய கற்பனை…..
முழு விவிலியத்தின் சாரத்தையும் நினைவுபடுத்துகின்றது….
அன்பின் பிரமாணமாயிருந்து மற்றமடையாது ஆதிமுதல் இன்றுவரையிலும் ஒன்றையே போதிக்கின்றது…
தேவனால் நேசிக்கப்பட்ட தேவனை முழு மனதோடு நேசித்த மனிதர்களை சுட்டிக்காட்டுகின்றது..
சில கேள்விகள்….
அன்பை பொருளாக கொண்டுள்ள பழைய ஏற்பாட்டின் கற்பனைகளை புறந்தள்ளலாமா?
காலத்துக்கு காலம் மாற்றமடைவதற்காகவா பிரமாணங்கள் தரப்பாடுள்ளன…
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள். தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. 1தீமோத்தேயு 1:5-11.