நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.
where I am, there My servant will be also. (John 12:26)
Jn14:3; Jn15:6; Jn17:24; Mt25:21; Lk23:43; 2Cor5:8; Phil1:23; 1Thes4:17,18.
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:26)
யோவான் 14:3; யோவான் 15:6; யோவான் 17:24; மத்தேயு 25:21; 33; லூக்கா 23:43; 2கொரிந்தியர் 5:8; பிலிப்பியர் 1:23; 1தெசலோனிக்கேயர் 4:17,18.
என்னோடு இருப்பான்:
சுவிசேஷங்களை படிக்கும் போதும், விவிலிய நூல்களை படிக்கும் போதும் நான் உன்னோடு இருப்பேன், நான் உங்களோடு இருப்பேன் என்ற கூற்றுகள் அதிகமாக காணப்படுவதை அறிவோம். ஆனால் நாம் அவரோடு இருக்க வேண்டும் என்ற கூற்றுகள் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே நாமும் அவரோடு இருப்பதை குறித்து அதிகமாய் தியானிப்பதில்லை. ஊழியக்காரன் கிறிஸ்துவோடுகூட இருப்பதற்கு அழைக்கப்பட்டவன் என்பதை இன்று கவனிப்போம்.
இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை தம்மோடு இருக்கும்படியாகவே தெரிந்துக் கொண்டார். ஆனால் அவரின் இறுதி காலங்களில் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர். மீன்பிடிக்க போயினர். எலிசாவோடு இருக்கும்படியாக அழைக்கப்பட்ட கேயாசி உலக பொருள்களின் மேல் கவனம் வைத்து விலகிச் சென்றான். மேய்ப்பர் நிருபங்களில் பல ஊழியக்காரர்கள் பவுலோடு இருந்து ஊழியம் செய்வதற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் உலக காரியங்கள் மேல் கவனம் வைத்து பிரிந்து போயினர்.
இயேசுகிறிஸ்து மனிதனை மீட்பதற்காக பரலோக மேன்மையை துறந்து மனிதனாக பாவ உலகிற்கு வந்து உலகை மீட்க தன் இன்னுயிரை தானமாக கொடுத்தார். இயேசுவை பின்பற்ற அழைப்பு பெற்ற ஊழியக்காரன் உலகத்திலிருந்தும், தாய் குடும்பத்திலிருந்தும், ஐசுவரியத்திலிருந்தும், அந்நிய மார்க்கத்திலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்டவனாயிருக்கிறான். உலகை இரட்சிப்பதற்காக கிறிஸ்துவை பின்பற்ற கட்டளை பெற்றவன் கிறிஸ்துவை போல உலக பதவிகள் மீதும், உலக ஐசுவரியங்கள் மேலும் வாஞ்சை வைக்காது மீட்பின் பணி செய்து கோதுமை மணியாக மாற வேண்டும். அப்படிப்பட்ட ஊழியனே இயேசுவோடு இருக்கிறவன்.
அழைப்பு பெற்ற யாவரும் அவரோடு இருக்க முடியாது. தெரிந்துக்கொள்ளப்பட்ட சிலரே அவரோடு இருக்க முடியும்.
இயேசுவை உலக பதவிகளிலும், ஐசுவரியத்திலும் தேட வேண்டாம். அவர் பிதாவின் மடியில் செல்லபிள்ளையாய் இருக்கிறார்.
ஊழியக்காரனும் இயேசுவைபோல பிதாவின் மடியில் இருக்க இயேசுவை முழுமையாய் பின்பற்ற வேண்டும். அவர் இருக்கும் இடத்தை வாஞ்சிக்க வேண்டும். பணம், பொன், பொருள், பட்டம், பதவியை கொண்டு அங்கு போக முடியாது.
துறக்கும் மனோபாவம் கொண்ட ஊழியக்காரனே இயேசுவோடு இருக்க முடியும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே மேய்ப்பனாயிருக்கிறவன் ஒரு அடிமையை போலிருந்து கிறிஸ்துவுக்கு பணி செய்கிறவனே ராஜ்யத்துக்குரியவன்.
இயேசுவோடு இருக்க நீர் செய்த தியாகம் என்ன?
ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:7-11.