நான் உலகத்தானல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்ல.
They are not of the world, just as I am not of the world. (John 17:16)
Micah 7:14; John 8:23; John 13:1; John 17:6; John 17:14; Romans 8:29; 1Corinthians 5:7-13; 1John 4:4-6.
நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. (யோவான் 17:16)
மீகா 7:14; யோவான் 8:23; யோவான் 13:1; யோவான் 17:6; யோவான் 17:14; ரோமர் 8:29; 1கொரிந்தியர் 5:7-13; 1யோவான் 1:4-6.
தேவனுக்குரியவர்கள் உலகத்துக்குரியவர்களல்ல.
இயேசுகிறிஸ்து உலகத்தாரல்லாததுபோல அவரை பின்பற்றுகிறவர்களும் உலகத்தாராயிருப்பதை கிறிஸ்துவும் விரும்பவில்லை, தேவனும் விரும்பவில்லை. இவர்கள் மண்ணிலிருந்து விண்ணுக்கும், மாம்சத்திலிருந்து ஆவிக்கும், மரணத்திலிருந்து ஜீவனுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாபத்திலிருந்து ஆசீர்வாதத்துக்கும், தாழ்விலிருந்து உயர்வுக்கும், தூளிலிருந்து கோபுரத்துக்கும், சாம்பலிலிருந்து சிங்காரத்துக்கும் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள்.
இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டவர்கள். மிருகங்களின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள் அல்ல, பரலோகத்திலிருந்து வந்ததினால் இயேசுகிறிஸ்துவின் இரத்தமும் தூய்மையானதாகவும், தேவதன்மைகளை உருவாக்குகிறதாகவும் உள்ளது. எனவே இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்கள் இயேசுவுக்கு சொந்தமானவர்கள். வெள்ளைதுணியை அழுக்கு துணியோடு சேர்க்கமாட்டோம். தங்கத்தை இரும்போடு கலக்கமாட்டோம். அலங்காரம் செய்துவிட்டு குப்பையில் போய் உட்காரமாட்டோம். அழுக்கோடு மணவறையில் பிரவேசிக்கமாட்டோம். அசுத்தமானதையும் நாற்றமிகுந்ததையும் வீட்டுக்குள் கொண்டுவரமாட்டோம். அப்படியெனில் கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள் கிறிஸ்துவோடும், கிறிஸ்தவர்களோடும் மட்டுமே வாழவிரும்புவர். தேவனுடைய பிள்ளைகளுக்குள் சிலபல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பகைமை இருக்கலாகாது. அந்த வேறுபாடுகள் இல்லாத தேவனுடைய இராஜ்யத்துக்குள் வரும்போது யாவும் மறைந்து போகும். எனவே வேறுபாடுகளை பெரிதுபடுத்தாது எஜமான் வேலைக்காரனைப்போலும். குரு சிஷ்யனைபோலவும் நடந்துக் கொள்வோம்.
தேவனுடைய இராஜ்யத்தில் மாம்சமும் அதன் கிரியைகளும் நுழைய முடியாது. உலகமும் அதன் பொருட்களும் நுழையமுடியாது. எவர்கள் தேவனுக்குரியவர்களாய் தேவனோடும் கிறிஸ்துவோடும் பரிசுத்த ஆவிக்குள் அன்னியோன்யமாய் வாழ்கிறார்களோ அவர்கள் மட்டுமே ராஜ்யத்தின் புத்திரராய் சுதந்தரத்துக்குள் நுழைய முடியும். கலப்பையின் மேல் கையை வைத்துக்கொண்டு பின்னிட்டு பார்த்து முன்னிட்டு செல்ல ஒருவரும் அனுமதியார்.
நம்மைநாமே சரிபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பிறிதொருவர் நம்மை சரிபடுத்த இடம் கொடுக்க வேண்டும். இவையிரண்டில் ஏதாவதொன்றை பின்பற்றித்தான் கிறிஸ்துவை பின்பற்றி செல்ல முடியும்.
நாம் உலகத்தாரல்ல; ஆனால் நம்முடியவைகள் உலகத்தவைகளே. எச்சரிக்கை.
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள். 1கொரிந்தியர் 5:7-13.