மரியாள் கல்லறையினுள் இரண்டு தேவதூதனைக் கண்டாள்

மரியாள் கல்லறையினுள் இரண்டு தேவதூதனைக் கண்டாள்.

She saw two angels in white sitting, one at head and other at feet. (John 20:12)

Matthew 28:3-5; Mark 16:5,6; Luke 24:3-7; Daniel 7:9; Matthew 17:2; John 1:51; John 5:4; John 12:29; Hebrew 1:4,6,7; Hebrew 12:22; 2Peter 3:22; Revelation 11:1.

வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள். (யோவான் 19:39) 

மத்தேயு 28:3-5; மாற்கு 16:5,6; லூக்கா 24:3-7; தானியேல் 7:9; மத்தேயு 17:2; யோவான் 1:51; யோவான் 5:4; யோவான் 12:29; எபிரெயர் 1:4,6,7; எபிரெயர் 12:22; 2பேதுரு 3:22; வெளி 11:1.

தேவதூதர்கள்:
கல்லறையினுள் உற்று நோக்கிய பேதுருவும், மற்ற சீஷனும்  காணக்கூடாத அதிசயமானதோர் காட்சியை மகதலேனா மரியாள் கண்டாள். வெண்மையான உடை தரித்த இரண்டு தேவதூதர்கள் இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் தலைபாகத்தில் ஒருவரும், கால் பாகத்தில் ஒருவரும் உட்கார்ந்திருந்தார்கள். தன் பாவங்களை விட்டு உண்மையாய் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் மேல் பற்றுறுதியும், அன்பும் உடையவளாயிருந்த மரியாளுக்கு இரக்கம் கிடைத்தது. பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களின் வரிசையில் இந்த மரியாளும்  தேவனின் தூதர்களை கண்டாள். அரிதானதொரு காட்சியைக் கண்டாள்;
தேவதூதர்கள் காற்றுகளாகவும், அக்கினியாகவும் இருக்கிறார்கள் என்று விவிலியம் கூறுகின்றது. எபிரெயர் 1:7. எபிரெயர் 1:14 ல் இரட்சிப்பை சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியம் செய்யும் படியாக அனுப்பப்படும் பணிவிடையின் ஆவிகளாக இருக்கிறார்கள். அவர்களே ஊழியம் செய்யும்படியாக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று அறிய முடிகின்றது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சிறந்த பாடம் என்னவெனில்…..
மனுகுலம் இரட்சிப்படைய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. மனுகுலத்தின் இரட்சிப்புக்காக தேவன் தமது தூதர்களையும் பயன்படுத்துகின்றார். சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி அனுப்பப்படுகிற  தேவனுடைய ஊழியக்காரர்களின் வரிசையில் அவருடைய தூதர்களும் பங்காற்றுகிறார்கள். நம்மிடம் தரப்பட்டுள்ள திருப்பணியை நாம் செம்மையாக செய்கிறோமா என்பதை கவனிக்கிறவர்களாக மட்டுமல்லாது இடர்பாடுகள் நிறைந்த இவ்வுலகில் ஊழியக்காரர்களின் பாதுகாப்புக்கும், ஒத்தாசைக்கும் உத்திரவாதிகளாகவும் இருக்கிறார்கள். ஆகையினால் ஊழியம் செய்கிறவர்களை ஆவியானவர் மட்டுமல்ல தேவதூதர்களும் கவனிக்கின்றார்கள். இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளின் இரட்சிப்பை குறித்தும் தூதர்கள் கவனிக்கிறவர்களாக இருக்கிறார்கள். 

மரியாள் தேவதூதரை காணும் பாக்கியத்தைப் பெற்றாள். இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின்  திருப்பணியில் தேவ தூதர்களின் பங்களிப்பு முக்கியமானது. கிறிஸ்துவின் சரீரம் அடக்கம் செய்யப்பட்ட  கல்லறையை காக்க ராஜாவால் அனுப்பப்பட்ட காவலாளர்கள் இருக்க, கிறிஸ்துவின் சரீரத்தை காக்கும்படி பரலோக தேவனால் அனுப்பப்பட்ட தேவதூதர்கள் இருந்தார்கள். அவர் உயிர்த்தெழுதலுக்கானவராய் இருந்ததினாலும், அவருடைய சரீரம் அழிவுக்குரியதாய் தள்ளப்படலாகாது என்பதினாலும் தமது தூதர்களைக் கொண்டு பாதுகாத்தார். 

ஆம், நாம் தேவதூதர்களின் பணிவிடைகளை நம் வாழ்வில் பெறுகின்றோம் என்பதை மறந்துப் போக வேண்டாம். 
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். இவர் தேவதூரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார். 

எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? ஆகிலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். தேவதூதரைக்குறித்தோ தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? 
ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து பரிசுத்த ஆவியின் வரங்களிலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரேயர் 1:1-7,14; 2:1-4

ADD YOUR COMMENT

Powered By Indic IME