தேவனுடைய பிள்ளைகள், பிசாசினுடைய பிள்ளைகள்

தேவனுடைய பிள்ளைகள், பிசாசினுடைய பிள்ளைகள்.

In this the children of God and the children of the devil are manifest. (1John 3:10)

1John 5:2; Luke 6:35; Romans 8:16,17; Ephesians 5:1; Matthew 13:38; John 8:44; Acts 13:10.

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. (1 யோவான் 3:10)

1யோவான் 5:2; லூக்கா 6:35; ரோமர் 8:16,17; எபேசியர் 5:1; மத்தேயு 13:38; யோவான் 8:44; அப்போஸ்தலர் 13:10.

வேறுபாடு.

தேவனால் பிறந்தவன் எவனும் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறான். பிசாசினால் பிறந்தவன் பிசாசின் பிள்ளையாயிருக்கிறான். தேவனும், பிசாசும் இவ்வுலகில் இரண்டு பெரிய ஆதிக்க சக்திகளாக அறியப்பட்டுள்ளது. எந்த ஒரு விஷயங்களிலும் இவையிரண்டின் செயற்பாடுகள் காணப்படும். இதில் ஏதாவது ஒன்றை சார்ந்தோ அல்லது இந்த சகதிகளினால் ஆட்கொள்ளப்பட்டோ காணப்படும். இந்த இரு ஆதிக்க சக்திகளையும் நன்மை, தீமை என்ற இரு தன்மைகளுக்குள் கொண்டு வரலாம். நன்மையுடையவர்கள் தேவனை சார்ந்தோ தேவனால் நடத்துவிக்கப்பட்டோ காணப்படுவர். தீமையுடையவர் பிசாசை சார்ந்தோ அல்லது பிசாசினால் நடத்துவிக்கப்பட்டோ அல்லது பிசாசின் தன்மை கொண்ட உலகம், மாம்சம் ஆகியவைகளை கொண்டோ செயல்படுவர். எனவே இவையிரண்டுக்குமான போராட்டம் தொடர்ந்துக் கொண்டேயிருக்கின்றது.

தேவனால் பிறந்தவர்கள் தேவனுடையவர்களாய் இருப்பதினால் ஆவிக்குரிய காரியங்களிலும் நற்கிரியைகளிலும் நன்மை செய்வதிலும் முன்னிலை வகிப்பர். இவர்கள் தேவனுடையதும் கிறிஸ்துவினுடையதுமான நற்கிரியைகளை செய்து தங்களை தேவனுடைய பிள்ளைகளாக விளங்கச் செய்வர். கிறிஸ்துவை போல வாழ்கிறவர்களாயிருப்பர். அவரை பின்பற்றுகிற தேவ பிள்ளைகளாயிருப்பதினால் அவரின் விருப்பப்படி நடக்கிறவர்களாகவும், அவருடைய ஆலோசனை பெற்று காரியங்களை நடப்பிக்கிறவர்களாகவும் காணப்படுவர். வெற்றியின் பாதையில் அவர் தங்களை நடத்தும்படியாக ஒப்புக்கொடுப்பர். துன்மார்க்கமான காரியங்களை விட்டு விலகியிருப்பர்.

பிசாசின் பிள்ளைகளோ பிசாசின் தன்மைகளை பிரதிபலிப்பர். உலகத்துக்குரியவைகளிலும் மாம்சத்துக்குரியவைகளிலும், இச்சைக்குரியவைகளிலும் அதிக ஈடுபாடு கொள்வர். தேவனுடைய பிள்ளைகளோடு ஒத்துப்போகாமல் அவர்களோடு போராடுகிறவர்களாயிருப்பர். அவர்களோடு ஒத்துப்போனாலும் தங்களின் யோசனைகளை தேவனுடைய பிள்ளைகளுக்கு கொடுத்து தேவ பிள்ளைகளை வீழ்ச்சியடைய செய்வர்.

வேறுபாடுகள் தேவனால் வைக்கப்பட்டுள்ளது. பிசாசையும் அவன் கூட்டத்தையும் வெளியேற்றியதினிமித்தம் தேவன் தமது நீதியை விளங்கச் செய்தார். ஒருபோதும் அவர்களோடு இணங்கிச் செல்ல போதிக்கவில்லை. பிசாசையும் அவனை பின்பற்றுகிறவர்களையும் அழிப்பதற்காகவே அவர் காத்துக் கொண்டிருக்கிறார். வேறுபாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கபடுவது தேவன் பிசாசை அழிவுக்கு ஒப்புக்கொடுக்கும்போதுதான். அதன்பின்பு தேவனுடைய பிள்ளைகள் மாத்திரமே வாழ்ந்திருப்பர்.

கேள்வி. பூமிக்குரிய சில விஷயங்களில் இருசாராரும் ஒத்துப்போகலாம் என்று கூறுவது ஏற்புடையதா?

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2கொரிந்தியர் 6:14-18.

ADD YOUR COMMENT

Powered By Indic IME