உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்க இவைகளை எழுதுகிறேன்.
And these things we write to you that your joy may be full. (1 John 1:4)
Isaiah 61:10; Haba 3:17,18; John 15:11; John 16:24; 2 Corinthians 1:24; Philippians 1:25,26; 2John 1:12.
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். (1 யோவான் 1:4)
ஏசாயா 61:10; ஆபகூக் 3:17,18; யோவான் 15:11; யோவான் 16:24; 2கொரிந்தியர் 1:24; பிலிப்பியர் 1:25,26; 2 யோவான் 1:12.
நிறைவான சந்தோஷம்.
யோவான் இந்நிருபத்தின் முதல் நான்கு வசனங்களிலும் தான் எழுதுகிற இந்த சிறிய நிருபம் எதற்காக எழுதப்படுகிறது என்பதை விளக்குகின்றார். இயேசுவை ஜீவ வார்த்தையாக காண்பிக்கவும், இயேசுவை ஜீவனாகவும், இயேசுவோடு தாங்கள் ஐக்கியம் கொண்டவர்களாகவும், வாசிக்கிறவர்கள் நிறைவான சந்தோஷம் அடையும்படியாகவும் எழுதப்பட்டுள்ளதாக கூறுகின்றார்.
நிறைவான சந்தோஷம் அடைய வேண்டும் என்பது யோவானின் விருப்பம். இயேசுவோடும் அவரது வார்த்தையோடும் இணைந்து வாழ்ந்து இந்த சந்தோஷத்தை நிறைவாகப் பெற்றார். தான் பெற்ற சந்தோஷத்தை தன்னை பின்பற்றி வருகிற கிறிஸ்துவின் அடியவர்கள் ஒவ்வொருவரும் நிறைவாக பெற வேண்டும் என்பதற்காக இதனை எழுதி அறிவிக்கின்றார்.
இயேசுவின் ஜீவனை பெறுவதிலே உண்டாகும் சந்தோஷத்தை குறிப்பிடுகின்றார். இயேசுவை ஏற்றுக்கொள்ளு முன்பதாக கொண்டிருந்த ஜீவன் மரணத்துக்கு குறிக்கப்பட்டதாயும், பாவத்தினிமித்தம் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கிறதாயும் இருந்தது. கிறிஸ்துவினால் உண்டான மீட்பினிமித்தம் கிறிஸ்துவின் ஜீவனை பெற்றபோது மரணத்துக்கு குறிக்கப்பட்ட நிலை மாறி நித்திய வாழ்வுக்கு குறிக்கப்பட்டதாக மாறியது. பாவங்கள் மன்னிக்கப்பட்டதினால் அதன் விளைவுகளாகிய துன்பம், வருத்தம் மாறிப்போயிற்று. கிறிஸ்துவில் இருந்த சந்தோஷம் அவரின் ஜீவனை பெற்றவர்களில் வந்தது. இந்த சந்தோஷம் நிறைவான – பரிபூரணமாக – முழுமையாக கொடுக்கப்பட்டது. எனவே மீட்பு அல்லது இரட்சிப்பு என்பது கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக்கொள்வதாகும். அவரின் ஜீவனை பெற்றுக்கொள்ளாமல் அவரின் சந்தோஷம் கிடைக்காது.
கிறிஸ்துவில் இருந்த சந்தோஷமானது இல்லாமையிலும் முறுமுறுக்காமல் தகப்பனை நோக்கிப்பார்க்க வைத்தது. நிராகரிக்கப்பட்ட சூழல்களிலும் தகப்பன் தன்னோடிருக்கிறார் என்று பேச வைத்தது. உபத்திரவங்கள், பாடுகள், மரணம் ஆகியவை வந்த போதும் தகப்பனின் மடியையே அடைக்கலம் தேடவைத்தது. ஆகவே இந்த சந்தோசமானது பிதாவாகிய தேவன் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதில் உண்டாவதாகும். ஆகவே இந்த சந்தோஷம் நம்மில் உண்டாக ஒரேவழி கிறிஸ்துவோடும் பிதாவோடும் இணைந்திருப்பதுவே. இந்த சந்தோஷம் மரணவலியையும் தாங்கும் சக்திக் கொண்டது.
நிறைவான சந்தோஷம் நம்மை எங்கே நடத்திச் செல்கின்றது?
கிறிஸ்துவை அறியாதோருக்கு கிறிஸ்துவை அறிவிக்க நடத்திச் செல்கிறது.
தேகத்தைவிட்டு பிரிந்து எப்பொழுதும் கிறிஸ்துவோடிருக்க நடத்துகிறது.
பசி, தாகம், தனிமை போன்றவைகளை அனுபவித்தாலும் அதை குறித்த நினைவில்லாமல் இருக்க நடத்திச் செல்கிறது.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற நடத்திச் செல்கிறது…
சில கேள்விகள்..
நிறைவான சந்தோஷத்தை கொண்டிருந்த இயேசு மரணவேதனைக்குள் சென்ற காரணம் என்ன?
நம்மில் இருப்பதாக நாம் நம்புகின்ற சந்தோஷம் உலகபொருட்களோடும், உலக உறவுகளோடும் இணைந்த ஒன்றா?
இவைகள் இல்லாதுபோனால் நமது சந்தோஷம் நம்மில் நிலை கொண்டிருக்குமா?
அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சங்கீதம் 4:7.