தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளில் நடக்கிறான்

தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளில் நடக்கிறான்

But he who hates his brother is in darkness and walks in darkness. (1John 2:11)

1John 2:9; John 12:35,40; 2Corinthians 3:14; 2Corinthians 4:4; Titus 3:3; Revaluation 3:17; Psalms 82:5; Proverb 4:19.

தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான். (1 யோவான் 2:11)

1யோவான் 2:9; யோவான் 12:35,40; 2கொரிந்தியர் 3:14; 2கொரிந்தியர் 4:4; தீத்து 3:3; வெளி 3:17; சங்கீதம் 82:5; நீதிமொழிகள்4:19.

சகோதரரைப் பகைக்கிறவன்:

நிருபத்தை எழுதிய ஆக்கியோன் தன் வாழ்வில் எதை கடைபிடித்தாரோ அதை எழுதுகிறார். எதை போதித்தாரோ அதையே எழுதுகின்றார். எதைக் கற்றுக்கொண்டாரோ அதை எழுதுகிறார். இயேசு கிறிஸ்து தமது சகோதரர்களிடையில் நடந்துகொண்ட முறைமையை அவரோடு கூட இருந்து அறிந்து புரிந்து இப்பொழுது எழுதுகிறார். சகோதரனைப் பகைக்கிறவன் எப்படிபட்டவனாய் இருக்கிறான் என்பதைக் கண்டு அறிந்து அனுபவித்து எழுதுகிறார்.

முதலாவது அவன் இருளில் இருக்கிறான். இருளில் வாழ்கிறான். கண்கள் இருந்தும் குருடனாய் வாழ்கிறான். அவன் சிந்தனைகள் யாவும் இருட்டு வாழ்வுக்கானதாகவே காணப்படுகிறது.

இரண்டாவது, அவன் இருளில் நடக்கிறான். அவன் படித்திருந்தாலும் , வசதியுடையவனாயிருந்தாலும் , பெரிய மனுஷனாயிருந்தாலும் அவன் நடக்கும் பாதையில் வெளிச்சம் இல்லாததினால் இருளிலே நடக்கிறான். அவன் செய்வதெல்லாம் இருளின் அம்சமாகவே காணப்படும். அவனோடு நடப்பவர்கள் யாவரும் இருளிலே நடக்கிறவர்களாகவே இருப்பார்கள். அவன் இருளிலே நடப்பதினால் அவனின் தன்மைகளை இருளின் மக்கள் அறியாது அவனோடு ஒருமித்து பங்காளித்துவம் கொள்வார்கள்.

மூன்றாவது, இருள் அவன் கண்களை குருடாக்கியதினால் அவன் குருடனாயிருக்கிறான். இருளிலே வாழ்ந்து பழகியதினால் புறக்கண்களும் குருடாயிற்று, அகக்கண்களும் குருடாயிற்று. அவன் குருடனாயிருப்பதினால் நன்மை இது, தீமை இது என்று பகுத்தறியும் மனகண்கள் இல்லாதவனாயிருக்கிறான். அக்கிரமமான விஷயங்களை நல்லவைகளாக நினைத்து ஆர்வத்துடனும், ஆவேசத்துடனும் செய்கிறவனாயிருப்பான்.

நான்காவது, இவன் குருடனாயிருப்பதினால் தான் போகும் வழி எதுவென்று அறியாதிருக்கிறான். இடுக்கமான வழியா? அல்லது விசாலமான வழியா என்ற அறிவும் இல்லாதவனாயிருக்கிறான். இடுக்கமான வழி என்று நினைத்து விசாலமான வழியிலே நடக்கிறான். தான் சரியாயிருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு மரண வழியிலே நடக்கிறான். ஜீவபாதையைக் காணும் கண்கள் இல்லாததினாலும் சொல்லுவதைக் கேட்டு அதன்படி செய்கிற உணர்வும் இல்லாதபடியினாலும் தான் போகும்பாதை எதுவென்று தெரியாத பைத்தியமாக நடக்கின்றான்.

சகோதர சிநேகத்தை வெறுக்கிற எந்தமனிதனும் யோக்கியனாயிருக்க முடியாது.

சகோதரரைப் பகைக்கிறவன்….
தன்னைதானே வெறுக்கிறவனாயிருக்கிறான்…
தன்னை சரியானவன் என்று சொல்லிக்கொண்டு அநேக நல்லவர்களையும் இடறிவிழ பண்ணுகிறவனாயிருக்கிறான்….
தன்னை அறியாமலே பிசாசின் ஏவல் புரிகிறவனாயிருப்பான்…
இருளின் ஆயுதங்களை தரித்தவனாய் இருப்பான்…

சிலகேள்விகள்….
அநேக தேவ மனிதர்கள், தேவ பிள்ளைகளின் வீழ்ச்சிக்கு இந்த சகோதர சிநேகம் இல்லாதிருப்பதுவே காரணமாயிருக்குமோ?…

சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. எபிரேயர் 13:1.

கிறிஸ்து உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். 1பேதுரு 2:21-23.

ADD YOUR COMMENT

Powered By Indic IME