கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசின மரியாள்.
Mary who anointed Lord with fragrant oil and wiped His feet with her hair,whose brother Lazarus was sick. (John 11:2)
Jn12:1-7; Mt8:15; Mt26:6-13; Mk1:13; Mk14:1-9; Lk4:39; Lk7:36-50; Lk8:3; Ro15:25.
கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே, அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான். (யோவான் 11:2)
யோவான் 12:1-7; மத்தேயு 8:15; மத்தேயு 26:6-13; மாற்கு 1:13; மாற்கு 14:1-9; லூக்கா 4:39; லூக்கா 7:36-50; லூக்கா 8:3; ரோமர் 15:25.
பணிவிடையின் ஆவி:
யோவான் சுவிசேஷகர் இயேசுவை கர்த்தர் என்று அழைக்கின்றார் . இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்த பின்புதான் அவரை கர்த்தர் என்று சுவிசேஷகங்கள் அழைக்கின்றது. ஆதிசபையாருக்காக எழுதப்பட்ட இந்த சுவிசேஷத்தில் அக்கால வழக்கத்திலிருந்த விசுவாச அறிக்கையாகிய இயேசுவே கர்த்தர் என்பதை இங்கே ஆக்கியோன் குறிப்பிடுகின்றார்.
இயேசுவுக்கு பரிமளதைலம் பூசி அவருடைய பாதத்தை தன் தலைமயிரால் துடைத்தவர் இந்த மரியாளே. இந்த குடும்பத்துக்கும் இயேசுவுக்கும் ஆவிக்குரிய முறையில் ஏதோவொரு பந்தம் இருந்திருக்க வேண்டும். இவர்கள் விருந்தோம்பல் செய்கிற குடும்பமாக இருந்திருக்ககூடும். இயேசுவை தங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவருக்கு பணிவிடை செய்த குடும்பங்கள் பல இருந்தன. அவைகளில் ஒன்றே இந்த மரியாளின் குடும்பம்.
மரியாளின் இந்த செயலை யோவான் 12 ஆம் அதிகாரத்தில் நாம் தியானிக்கலாம். இங்கே பணிவிடையின் ஆவி என்ற தலைப்பில் தியானிப்போம். பணிவிடை என்பது கடமைக்காக செய்வதல்ல. உணர்வுகளிலும், சிந்தைகளிலும் உருவாகி அது வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை முறையாகும்.
உறவுகளுக்கு உட்பட்ட பணிவிடைகளும் உண்டு, இயலாதோருக்கு செய்யும் பணிவிடைகளும் உண்டு, ஊழியகாராருக்கு செய்யும் பணிவிடைகளும் உண்டு, தேவனுக்கு செய்யும் பணிவிடைகளும் உண்டு, ஒருவருக்கொருவர் செய்யும் பணிவிடைகளும் உண்டு. எத்தகைய பணிவிடைகளானாலும் அவைகள் நல்ல மனநிலையையும், நல்ல உறவுகளையும் கட்டி எழுப்பக்கூடியதாகும்.
மரியாள்,மார்த்தாள், லாசரு ஆகியோரின் பணிவிடைகள் மிகவும் மெச்சதக்கவைகள். அவர்கள் குடும்பமாக இயேசுவுக்கு பணிவிடை செய்தார்கள். மனமகிழ்ச்சியோடும், புன்சிரிப்போடும், வலிய செயல்படும் ஆர்வத்தோடும் பலன் எதிர்பாராது பணிவிடை செய்தார்கள்.
தேவனுடைய இராஜ்ஜிய விரிவாக்கத்தில் இத்தகைய பணிவிடையின் ஆவியைக் கொண்டுள்ள குடும்பங்களினால்தான் சபைகள் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இவர்கள் தங்கள் பணதிமிரையோ,படிப்பு திமிரையோ, குல திமிரையோ ஒழித்துவிட்டு தாழ்மையோடும், கீழ்படிதலோடும், அன்போடும், பணிவோடும் பணிவிடை செய்கின்றவர்கள். இவர்கள்தான் தேவனுக்கும் அவருடைய ஊழியக்காரருக்கும், சபைக்கும் நெருங்கிய உறவுகாரர்கள்.
பணிவிடையின் ஆவி உள்ளவர்களாய் எல்லாகுடும்பங்களும் மாறுமென்றால் பரலோகம் அதிக சந்தோஷப்படும்.
கர்த்தாவே நாங்கள் உண்மையான பணிவிடையின் ஆவி உள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்று நீர் விரும்புகின்றீர். நாங்கள் இதனை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல வாழ உதவி செய்யும்.