அவர் வந்து, கண்டித்து உணர்த்துவார்.
He has come, He will convict the world of sin, and of righteousness, and of judgment. (John 16:8)
Zechariah 12:10; Act 2:37; Act 16:29,30; John 8:9,46; 1Corinthians 14:24,25; Jude 1:15; 1Corinthians 2:4,5; John 3:20; 2Corinthians 10:1; Titus 1:14.
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். (யோவான் 16:8)
சகரியா 12:10; அப்போஸ்தலர் 2:37; அப்போஸ்தலர் 16:29,30; யோவான் 8:9,46; 1கொரிந்தியர் 14:24,25; யூதா 1:15; 1கொரிந்தியர் 2:4,5; யோவான் 3:20; 2கொரிந்தியர் 10:1; தீத்து 1:14.
கண்டிக்கும் ஆவி:
கண்டித்தல் என்பதைக் கண்டனம் என்றும், தவறு என நிரூபித்தல் எனவும், தவறு என எடுத்துக்காட்டி வலியுறுத்துதல் எனவும், உன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காண்பித்தல் என்றும் பொருள்படுகின்றது.
பழைய ஏற்பாட்டில் தேவனின் கண்டிப்பையும், கடிந்து கொள்ளுதலையும் அறிவோம். தண்டனைக்கு முந்தைய நிலையே கண்டித்தல் ஆகும். கண்டித்தும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் தம்மை பட்சிக்கிற அக்கினியாக வெளிப்படுத்தியுள்ளார். பரிசுத்த ஆவியின் வல்லமை வெளிப்பட்டு எதிராளிகளை அழித்ததையும் பழைய ஏற்பாட்டு நூல்களில் வாசிக்கிறோம்.
கர்த்தராகிய இயேசுவின் கண்டிப்பையும், கடிந்துகொள்ளுதலையும், சாட்டையை சுழற்றி கோபத்தை வெளிப்படுத்தியதையும் அறிகின்றோம்.
கண்டிப்பை தங்களில் கொண்டிருந்த பிதாவினாலும், குமாரனாலும் அனுப்பப்பட்ட ஆவியானவர் அவர்களை போலத்தான் இருக்கிறார். ஆதி சபையில் உண்டான தூய்மைகேட்டையும், பொய்மையையும் விரும்பாது பரிசுத்த ஆவியானவர் தமது கோபத்தை வெளிப்படுத்தியதை அப்போஸ்தலர் 5:1-11, 1கொரிந்தியர் 11:30,31 போன்ற பகுதிகளில் வாசிக்கின்றோம். அதே ஆவியானவர் தான் இன்றைக்கும் சபைகளில் – நம்மில் இருக்கின்றார்.
நமது கிரியைகள், பேச்சுக்கள் மூலம் நம்மில் இருக்கும் ஆவியானவர் துக்கப்படுவாரானால் நம்மிடையே அவர் எழும்பி அழிப்பதற்கு முன் கண்டிப்புக்கு செவிசாய்த்து மனந்திரும்பியாக வேண்டும்.
தீர்க்கதரிசன ஆவி என்பது ஆவியின் பணிகளில் ஒன்று. ஆவியானவர் தீர்க்கதரிசிகளைக் கொண்டு கண்டித்தும், வெட்டியும் கேளாது போவதினால்தான் தண்டனைக்குட்படுகின்றோம்.
கண்டித்து உணர்த்தும் ஆவியானவரையே நாம் பெற்றுள்ளோம். முதலாவது நம்மை கண்டித்து புடமிட்டு பக்குவப்படுத்துகிறார். பிற்பாடு பக்குவபடுத்தப்பட்ட நம்மை கொண்டு பிறரை கண்டித்து உணர்த்துகின்றார். கண்டித்து உணர்த்தும் பணியை செய்யாத எவரும் ஆவியின் நிறைவை பெற்றவர்களாக கருத இயலாது. பாவம், கீழ்படியாமை, தெய்வபயமற்ற செயலை கண்டு கண்டுக்காமல் இருப்பவர் அல்ல ஆவியானவர்.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான். யோவான் 3:17-21.