கண்களின் இச்சை உலகத்தினாலுண்டானவைகள்

கண்களின் இச்சை உலகத்தினாலுண்டானவைகள்

For all that is in the world the lust of the eyes,is not of the Father but is of the world. (1John 2:16)

Genesis 3:6; Genesis 6:2; Jos 7:21; 2Samuel 11:2; Job 31:1; Psalms 119:36,37; Ecc 5:10,11; Matthews 4:8; Matthews 5:28; Luke 4:5

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். (1 யோவான் 2:16)

ஆதியாகமம் 3:6; ஆதியாகமம் 6:2; யோசுவா 7:21; 2சாமுவேல் 11:2; யோபு 31:1; சங்கீதம் 119:36,37; பிரசங்கி 5:10,11; மத்தேயு 4:8; மத்தேயு 5:28; லூக்கா 4:5.

கண்களின் இச்சை:

மாம்சத்தில் குடிகொண்டுள்ள இச்சை போன்று கண்களிலும் இச்சை குடிகொண்டுள்ளதைக் குறித்து யோவான் குறிப்பிடுகின்றார். ஆதியாகமம் 3:6 ல் அழகான பழத்தைக் கண்டு, பறித்து, புருஷனுக்கும் கொடுத்தாள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பழம் அழகாயிருந்தது என்று சொல்வதைவிட புசிப்புக்கு ருசியானது என்பதுதான் பிரதானம். இது ஏவாளுக்கு எப்படி தெரியும்? அந்த பழம் புசிப்புக்கு ருசியானது என்று பாம்பானது ஏவாளை நம்ப வைத்தது. மேலும் அந்த பழத்தை பறித்து புசித்துமிருக்க வேண்டும். சொல்லாலும் செயலாலும் தூண்டப்பட்ட ஏவாள் அதன் அழகை கண்டாள். இதில் இரு விஷயங்கள் உள்ளன. ஒன்றில் அது மற்ற பழங்களைவிடவும் அழகாயிருந்ததை துவக்கத்திலிருந்தே ஏவாள் கவனித்திருக்க வேண்டும். அழகை ஆராதித்துக் கொண்டு வந்தவள் அழகால் தூண்டப்பட்டாள். இரண்டாவது சர்ப்பத்தின் சொல்லையும் செயலையும் உள்வாங்கிக்கொண்டவளுக்கு பழத்தின் மாய தோற்றமாகிய புது அழகு கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அழகாயுள்ள ஒருவர் அதிக அலங்காரம் செய்து கவர்ந்திழுப்ப்துபோல ஏவாளும் பழத்தின் மாயதோற்றத்தைக் கண்டு வியந்து போனாள்.

கண்களின் இச்சை என்பது பார்ப்பதில் உள்ள குறைபாடு என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிறர் தன்னை பார்க்கும்படியாக உடை உடுத்துவதும், நளினம் காண்பிப்பதும், கிண்டல் பேசுவதும் கண்களின் இச்சையை உண்டாக்கும் சாத்தானின் ஆவியேயாகும். இயற்கை அழகை மெருகேற்றி பிறரை கவர்ந்திழுப்பது பாவத்திலும் பாவம். அது மன்னிக்கப்படவியலாத சாபமாகும். தேவனுடைய மகிமையைக் குலைத்துப் போடுவதுமாகும். அப்படிப்பட்டவர்கள் மீட்கப்பட்டாலும் பலருடைய ஆன்மாக்களை நரகத்துக்குப் போகும்படி செய்த கவர்ச்சியினிமித்தம் தண்டனையை அனுபவித்தேயாக நேரிடும்.

ஒன்றை கவனிக்கும் ஒருவர் அதனால் இழுக்கப்படுவாரானால் அந்நபரின் மாம்சத்திலே இச்சை இருந்துள்ளது என்பதை அறிக. கவர்ச்சிகளினால் பரிசுத்தவான்கள் இழுக்கப்படும்படியாகவே பிசாசானவன் அழகை மெருகேற்ற வைக்கிறான். அநேக இந்து சன்னியாசிகள் இந்த கவர்ச்சிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள தங்களை வருத்தி துறவற நிலைக்கு சென்றார்கள் என்பது பாரம்பரியம். குருவிகளை பிடிக்கும் வலையைப்போல பரிசுத்தவான்களை குழியிலே தள்ளும்படியாக அநேக வேசியின் ஆடையாபரணம் தரித்தவர்களை பிசாசானவன் பரிசுத்தமான சபைகளிலே கட்டவிழ்த்து விட்டுள்ளான். அநேக பரிசுத்தவான்கள் இந்த மாயகண்ணியிலே அகப்பட்டார்கள். தாவீது அகப்பட்டான். இயேசு தப்பித்தார். நாமும் இயேசுவின் பிள்ளைகளாக இருப்பதினால் இயேசுவைபோல விலகி நடப்போம்.

அழகு என்பது இயற்கை. அழகை மெருகேற்றுவது சாத்தானின் மாயவலை. கண்ணிகளும் சுருக்குகளும் உள்ளதாகும். தேவ மனிதர்கள் இந்த மாய வலை போடப்பட்டுள்ள இடத்தில்தான் வாழ வேண்டியுள்ளது. இவைகள் பரிசுத்தவான்களை சோதித்து அவர்களின் இருதயத்தில் உள்ள இச்சைகளை கண்டறிய தேவனே அனுமதித்துள்ள மாயவலை. இதிலிருந்து தப்பிக்க விழிப்பு, ஜாக்கிரதை அவசியம்.

கேள்வி….
இக்கால சபைகளில் இத்தகைய கண்ணிகளும் சுருக்குகளும் உள்ளதினால் அவைகளை மாற்றமடைய செய்ய என்ன செய்வீர்கள்.?….

வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே. பிரசங்கி 11:9,10..

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். பிரசங்கி 12:13,14.

நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். சங்கீதம் 37:37.

ADD YOUR COMMENT

Powered By Indic IME