உடனே அவள் ஓடி பேதுருவிடமும், அன்பான சீஷனிடமும் தெரிவித்தாள்

உடனே அவள் ஓடி பேதுருவிடமும், அன்பான சீஷனிடமும் தெரிவித்தாள்.

she ran and came to Simon Peter,other disciple, whom Jesus loved,said to them, (John 20:2)

Psalms 9:11; Psalms 22:22; Psalms 40:5,10; Psalms 44:1; Psalms 71:17,18; Psalms 78:5; Psalms 96:2; Isaiah 42:12; Acts 9:15; Acts 17:3; Romans 10:15; 2Corinthians 2:14; Ephesians 2:17.

உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். (யோவான் 20:2)

சங்கீதம் 9:11; சங்கீதம் 22:22; சங்கீதம் 40:5,10; சங்கீதம் 44:1; சங்கீதம் 71:17,18; சங்கீதம் 78:5; சங்கீதம் 96:2; ஏசாயா 42:12; அப்போஸ்தலர் 9:15; அப்போஸ்தலர் 17:3; ரோமர் 10:15; 2கொரிந்தியர் 2:14; எபேசியர் 2:17. 

செய்தியை அறிவிக்க ஓடினாள்:
மகதலேனா மரியாள் கல்லறைத் தோட்டத்தில் கண்ட சாட்சிகளை இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினாள். காலையில் திறக்கப்பட்ட கல்லறையைக் கண்டது மாத்திரமல்ல, இயேசுவை காணவில்லை என்று அறிவிக்க ஊழியக்காரர்களிடமும் ஓடினாள். இந்த நிகழ்வினை நாம் கவனிக்கும்போது சில உண்மைகள் நமது நினைவகத்தில் நிழலிடுகின்றன. 

முதலாவது, இயேசுவை காணவில்லை என்பதை சீஷர்களுக்கு அறிவிக்க விரும்பினாள். இயேசுவோடும் அவரின் சீஷர்களோடும் அவளுக்கு நல்ல உறவு இருந்ததினால் அவரை அறியமுடியாத நிலையில் அவருடைய சீஷர்களிடம் சொல்லி தெரிந்துக் கொள்ள விரும்பினாள். கிறிஸ்துவின் அன்பு அவளை நெருக்கி ஏவினதினால் அவரை அறிய வீட்டையும், வேலையையும் மறந்தாள். 

இரண்டாவது, இயேசுவின் சரீரத்தை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று தப்பாக புரிந்துக் கொண்டாள். இயேசுவோடு அவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தும் இயேசுவின் உபதேசத்தை அறியமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டாளென்றால் பல ஆயிரம் வருடங்கள் தாண்டி அவரை பின்பற்றும் நாம் எப்படிப்பட்ட தப்பறைகளுக்குள் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்துக் கொள்வோமாக. நெருங்கினவர்களாலேயே இயேசுவை புரிந்து கொள்ள முடியாவிட்டால் அவ்வளவு நெருக்கம் இல்லாத நமது நிலைமை என்னவாகும்? இயேசுவை தேடிகண்டுபிடித்து சொல்லுங்கள். நாங்கள் அவருக்கு வாசனையிட வேண்டும் என்று கூறுகின்றாள். 

மூன்றாவது, அவரை வைத்திருக்கும் இடம் எங்களுக்கு தெரியவில்லை என்பதாகும். இயேசுவை எடுத்துக்கொண்டு போனவர்கள் எங்கே வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை என்று கூறுகின்றார்கள். உயிர்த்த இயேசுவை மரித்தோரிடத்தில் தேட உற்சாகப்படுத்துகின்றாள். இந்த மரியாளை போலவே நம்மில் பலரும் இயேசு எங்கேயிருக்கிறார் என்று தெரியாமல் அலைந்துக்கொண்டிருக்கின்றோம். சபை சபையாக, ஊழியர் ஊழியராக, ஸ்தாபனம் ஸ்தாபனமாக தேடிக்கொண்டிருக்கின்றோம். தரித்திருப்பதற்கும், நிலைத்திருப்பதற்கும், நிதானித்துக் கொள்வதற்கும் இந்த மரியாளைபோல நமக்கும் இயலவில்லை. அவர் உயிர்த்து விட்டார், உயிர்த்த இயேசு நம்மோடிருக்கிறார், நம்மை சந்திக்க வருவார் என்று மரியாளுக்கு நினைகூரவும் இயலவில்லை, நிதானிக்கவும் இயலவில்லை. பரலோகம் சென்றுள்ள இயேசு சீக்கிரம் வரப்போகின்றார் என்று ஆயத்தப்பட்டு காத்திருப்பதற்கு பதிலாக சொந்த ஊழியரை, ஸ்தாபனத்தை விட்டுவிட்டு பற்பலவிதமான உபதேசங்களையும், வாய்ப்புகளையும் தேடி ஓடிக்கொண்டேயிருப்போமானால் நாம் பரிதபிக்கதக்கவர்களாவோம். 

உங்கள் குறைகளை , பிரச்சனைகளை, வேதனையை, நன்மையை உங்கள் சொந்த ஊழியரிடமும், உங்கள் சொந்த சபையிலும் மட்டுமே பகிர்ந்துக் கொள்வீர்களாக. அப்பொழுது வாழ்வுண்டாகும். 
அறிவிக்க ஓடிய மரியாளைபோல நாமும் அவரை அறிவிக்க விரைவோமாக. 

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவாகள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். 
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் 10:9-17.

ADD YOUR COMMENT

Powered By Indic IME