இருளில் அகப்படாதபடிக்கு ஒளியில் நடவுங்கள்.
Walk while you have the light, lest darkness overtake you. (John 12:35)
Jn12:36,46; Jn1:5-9; Jn8:12; Jn9:5; Rom13:12-14; Eph5:8,14,15; 1The5:5-8; 1Jn1:6,7; Isa2:5; Isa42:6,7.
அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும், இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள், இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். (யோவான் 12:35)
யோவான் 12:36,46; யோவான் 1:5-9; யோவான் 8:12; யோவான் 9:5; ரோமர் 13:12-14; எபேசியர் 5:8,14,15; 1தெசலோனிக்கேயர் 5:5-8; 1யோவான் 1:6,7; ஏசாயா 2:5; ஏசாயா 42:6,7.
ஒளியில் நடவுங்கள்:
நடவுங்கள் என்பதற்கான எபிரேய பொருள் வாழ்ந்திரு என்பதாகும். இதற்கு ஒருவரின் ஜீவிதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவருதல், ஒருவரின் சுயத்தை ஒழுக்கம் சார்ந்து நடக்க வைத்தல், ஒருவரின் வாழ்வினூடாக கடந்துபோகுதல் என்று பொருள் தரப்பட்டுள்ளது. சுருக்கமாய் சொல்லப்போனால் ஒளியாக மாறி ஒளியிலே வாழ்தல் ஆகும். இவ்வார்த்தையை மூன்றுவிதமாக இந்த காலையிலே தியானிக்கலாம்.
இருளில் அகப்படாதபடிக்கு ஒளியில் நடவுங்கள். ஆதியில் இருள் காணப்பட்டது. அந்த இருளை போக்கவே ஒளியைப் படைத்தார். பாவம் உலகில் பிரவேசித்தபோது பாவ இருள் உலகை மேற்கொண்டது. இதனை மேற்கொள்ள பிரமாணங்களையும், பின்னர் கிறிஸ்துவையும் ஒளியாக கொடுத்தார். பிரமாணம் இஸ்ராயேலரையும் கிறிஸ்து முழு உலகையும் இருளிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். அந்த இருள் இஸ்ராயேலரோடு போராடியதுபோல கிறிஸ்துவோடும் போராடியது. இப்பொழுது சபையோடும் போராடிக்கொண்டிருக்கிறது. அந்த இருளில் நாம் அகப்படாதபடிக்கு தப்பிப்பிழைக்க இயேசு என்ற ஒளி மட்டுமே உள்ளது. இதனால் இருளில் அகப்படாமல் வாழ ஒளியை பற்றிக் கொள்வோம்.
ஒளி உங்களோடிருக்கும்போதே ஒளியாய் மாறி ஒளிர்ந்து ஒளியிலே நடந்து பயிற்சி செய்துகொள்ள வேண்டும். கிறிஸ்து என்ற ஒளி பிரகாசிக்கக்கூடாதபடிக்கு இருள் எழும்பி வருவதால் ஒளியை தனக்குள் கொண்டிருந்து ஒளிர்ந்து வாழுவோம். கிறிஸ்துவாகிய ஒளி மறைந்தாலும் நம்மில் உள்ள ஒளி நம்மை வழி நடத்தும். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுவோம்.
ஒளியாக ஒளியிலே நடவுங்கள். வெளிச்சத்திலே வெளிச்சம் காணும் அனுபவத்தைபோல ஒளியின் பிள்ளைகளாக ஒளியிலே நடக்க வேண்டும். கிறிஸ்துவின் ஒளியை நம்மில் கொண்டிருந்து விவிலிய வார்த்தைகளாகிய வெளிச்சத்திலே நடக்க வேண்டும். கர்த்தரின் வார்த்தைகளை பின்பற்றி அதன் வழியிலே நடவாதவர்கள் ஒளியை கொண்டிருப்பவர்கள் அல்ல. நாம் ஒளியாகவும் நடக்க வேண்டும். ஒளியிலேயும் நடக்க வேண்டும்.
நல்வழி நடந்து நல்வழி போதிப்பவரே ஒளியுடையோர். அவர்களே நற்கதிக்கு உடையவராவர்.
ஒளியுடையோர் விழியுடையார், விழியுடையோர் வழியுடையார், வழியுடையோர் ஒளிர்கிறவர்கள்.
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1யோவான் 1:5-7.