அன்னா காய்பாவினிடத்திற்கு இயேசுவைக் கட்டுண்டவராக அனுப்பினார்.
Then Annas sent Him bound to Caiaphas the high priest. (John 18:24)
Psalm 18:4,5; Psalm 69:3; Psalm 102:19,20; Psalm 107:11,14; Psalm 116:16; Psalm 147:3; Isaiah 42:6,7; Isaiah 49:9; Isaiah 58:6; Matthew 16:19; Luke 8:29; Luke 13:16.
பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
(யோவான் 18:24)
சங்கீதம் 18:4,5; சங்கீதம் 69:3; சங்கீதம் 102:19,20; சங்கீதம் 107:11,14; சங்கீதம் 116:16; சங்கீதம் 147:3; ஏசாயா 42:6,7; ஏசாயா 49:9; ஏசாயா 58:6; மத்தேயு 16:19; லூக்கா 8:29; லூக்கா 13:16.
கட்டப்பட்டவரே கட்டவிழ்க்கிறார்:
குற்றவாளியாக்கப்பட்ட குற்றமற்ற இயேசு கட்டப்பட்டவராக கொண்டுச் செல்லப்படுகிறார். பாவமில்லாத இயேசு பாவியாக்கப்பட்டவராக கொண்டுப்போகப்படுகிறார். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பது நியமம். இங்கே பெரியவர் சிறியவர்களால் தீர்ப்பிடப்படுகிறார். ஜீவனுடையோர் மரணத்தின்மேல் அதிகாரம் செலுத்த முடியும். ஆனால் மரணம் ஜீவனின்மேல் அதிகாரம் செலுத்த போராடுகிறது. நன்மை தீமையை மெற்கொள்ளும் ஆற்றல் உள்ளது. ஆனால் தீமை நன்மையை அழிக்க எத்தனிக்கின்றது. இவையெல்லாம் எதற்காக? மரணத்தினாலும், சாத்தானாலும், பலவீனங்களினாலும், தீமையினாலும், சாபத்தினாலும் கட்டப்பட்டுள்ள மனுகுலத்தை மீட்டு இரட்சிப்பதற்காகவே. ஆகையினால் கட்டப்பட்டவராக இயேசு கொண்டுப்போகப்படுகிறார்.
பாவமும் அதை சார்ந்தவைகளும், பிசாசும் அதை சார்ந்தவைகளும் தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனுகுலத்துக்கு எவ்விதமான ஊறு விளிவிக்கின்றது என்பதை மனுகுலம் அறிந்திருக்கவில்லை. சாத்தானின் கிரியைகளினாலும், பாவத்தின் கிரியைகளினாலும் உண்டாக்கூடிய சேதங்களை, பாதிப்புகளை விதி என்ற இரு வார்த்தைக்குள் அடக்கிவிட்டார்கள். எல்லாம் தலைவிதிபோலவே நடக்கிறது என்றும், அந்த தலைவிதியை மனிதன் பிறக்கும்போதே அவன் தலையில் கடவுள் எழுதிவிட்டார் என்றும் புராணம் பாடுகின்றானர். ஆனால் தலைவிதி எழுதப்படுமுன்பதாகவே தேவன் மனிதனின் கருவை காண்கின்றார் என்பதை மனிதன் அறியாது போகின்றான். இதனை விசுவாசித்தால் தலைவிதி அழிக்கப்பட்டு போகும்.
கட்டவிழ்க்கும் இயேசுவை கட்டப்பட்டவராக அல்ல, உயிர்த்தெழுந்தவராக, பாவத்தை ஜெயித்தவராக, சாத்தானை ஜெயித்தவராக, வியாதி பலவீனம் குறைவுகளை ஜெயித்தவராக பார்ப்போமாக. கட்டப்பட்டவரே கட்டவிழ்க்கிறவரும், விடுதலை செய்கிறவருமாயிருக்கிறார். ஆம் பாதாளம் வரையிலும் சென்று சிறைபட்டவர்களை அவரால் விடுவிக்க முடியுமென்றால் நம் கட்டுகளையும் அறுத்து நம்மை விடுவிக்க முடியும் என்று நம்புவோமாக.
இயேசுவை அன்று கட்டினார்கள். இனி அவரை ஒருவராலும் ஒருபோதும் கட்டி போட முடியாது.
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அப்போஸ்தலர் 2:22-32.