அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று.
Then this saying went out among the brethren that this disciple would not die. (John 21:23)
Mark 9:1; Luke 9:27; Revelation 2:25; Deutri 29:29; Job 28:28; job 33:13; Daniel 4:35
ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார். (யோவான் 21:23)
மாற்கு 9:1; லூக்கா 9:27; வெளி 2:25; உபாகமம் 29:29; யோபு 28:28; யோபு 33:13; தானியேல் 4:35.
தவறான கணிப்பு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே அவரோடிருந்த சீஷர்களும், அவரது காலத்திய இஸ்ராயேல் மக்களும் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை. அதைபோலவே, அவரது உபதேசங்களையும் இத்தியாதி மக்களும் , சீஷர்களும் சரியாக விளங்கிக்கொண்டிருக்கவில்லை. பரலோகராஜ்யத்தின் செய்திகள் மாம்சீக தன்மை கொண்டுள்ளவர்களினால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்ட பின்பே இயேசு போதித்தவைகள் குறித்த தெளிவடைந்தார்கள். இங்கே யோவானைக் குறித்து சொல்லப்பட்டவைகளை இயேசுவின் சீஷர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. நமக்கும் இக்கூற்று சற்று கருகலாகவே காணப்படுகின்றது. தேவன் மறைக்க விரும்பியவைகளை மறைத்து வைக்கிறார். அதோடு விட்டுவிட வேண்டும். அதிலே நுழைந்து ஆராய்ந்து, மூக்கு உடைபட்டு, உபதேசங்களை தலைகீழாக்கி, தேவனின் கோபாக்கினைக்கு ஆளாவதைவிட மறைவானவைகள் நம் தேவனுடையவைகள் என்று அறிந்து அவருக்கு பயந்து வாழ வேண்டும்.
யோவான் அப்போஸ்தலன் மரணமடைய வேண்டுமா வேண்டாமா என்பதையும், தாம் வருவது வரையிலும் அவரை வைத்திருப்பதைக் குறித்தும் அவரே தீர்மானிக்கின்றார் என்பதையும் குறித்து நாம் மௌனமாயிருப்பது நல்லது. மரணம் பாவத்தினால் உண்டாயிருந்தாலும் தம்முடையவர்களை மரியாமல் வைத்திருப்பது அவரது சித்தமானால் அதைக்குறித்து பிசாசும் கேள்வி கேட்க முடியாது, இயற்கையும் சண்டைபோட முடியாது. மௌனமே வழிமுறை.
கிறிஸ்துவின் உபதேசங்கள் யாவும் மாம்சீகத்தின் வெளிப்பாடுகள் அல்ல. இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்திருந்தாலும் மாம்ச அன்னியோன்யத்தில் ஜெனித்தவர் அல்ல, ஆவியினால் பிறந்தவர். ஆவியினால் பிறந்தது ஆவியாயிருக்கும் என்று இயேசுவே கூறியுள்ளார். ஆகவே, இயேசு கிறிஸ்துவின் உபதேசங்கள் யாவும் ஆவி சார்ந்ததாகவும், பரலோகம் சார்ந்ததாகவும் காணப்படுகிறது. அதே வேளையில் பழைய ஏற்பாட்டின் ஏராளமான உபதேசங்கள் பூமிசார்ந்ததாகவே காணப்படுகிறது. இஸ்ராயேலர் பூமிசார் சிந்தனை உடையவர்களாயிருந்ததினாலும், எல்லாவற்றையும் அதைகொண்டே கணிக்கிறவர்களாயிருந்ததினாலும் இயேசுவின் உபதேசங்களை சரியாக புரிந்துக்கொள்ளாமல் அவருக்கு எதிராக எழும்பினர். சீஷர்களும் அவ்விதமாகவே காணப்பட்டனர். சீஷர்கள் பரிசுத்த ஆவியை பெற்றபின்பு இவ்வித சந்தேகங்கள் உடையவர்களாயிருக்கவில்லை. பூமிசார் சிந்தைகளை விட்டுவிட்டு பரலோகசார் சிந்தயுடையவர்களாக காணப்பட்டனர்.
இக்காலத்திலும் தேவனுடைய மனிதர்கள் இரண்டு சிந்தைகளையும் ஒன்றோடொன்று இணைத்து தங்களையும், கேட்கிறவர்களையும் படுகுழிக்குள் விழப்பண்ணுகிறவர்களாயிருக்கிறார்கள். தேவனுடைய உபதேசங்களை அறிவுகொண்டோ, படிப்புகொண்டோ விளங்கிக்கொள்ள இயலாது. தேவனுடைய ஆவியினாலேயன்றி ஒருவரும் தேவனுக்குரியவைகளை விளங்க இயலாது.
ஆவியின் சிந்தையை கொண்டிருக்கிறவர்கள் கிறிஸ்துவின் உபதேசங்களை பூமிசார் சிந்தைகளோடு தைத்து சேர்க்கமாட்டார்கள். எவ்வித இடர்களானாலும், குறைவுகளானாலும் ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தபடுத்துவார்கள்.
பழைய ஏற்பாட்டில் ஆவிக்குரிய அர்த்தங்கள் தேடுவதைவிட புதிய ஏற்பாட்டின் ஆவியின் வசனங்களில் ஆவிக்குரிய அர்த்தம் தேடுவோமாக.
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. 1கொரிந்தியர் 2:9-16.