ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது.
If what you heard from the beginning abides in you, you also will abide in the Son and in the Father. (1John 2:24)
Psalms 119:11; Proverbs 23:23; Luke 9:44; John 15:7; Colossians 3:16; Hebrew 2:1; Hebrew 3:14; 2John 1:2; 3John 1:3; Revelation 3:3,11.
ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது. ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். (1 யோவான் 2:24)
சங்கீதம் 119:11; நீதிமொழிகள் 23:23; லூக்கா 9:44; யோவான் 15:7; கொலோசெயர் 3:16; எபிரெயர் 2:1; எபிரெயர் 3:14; 2யோவான் 1:2; 3யோவான் 1:3; வெளி 3:3,11.
கேட்டதில் நிலைத்திருங்கள்.
யோவானின் வாசகர்களுக்கு ஆதி சபையின் துவக்க காலத்தில் அறிவிக்கப்பட்ட கிறிஸ்துவின் சுவிசேஷமானது கிறிஸ்துவின் மேலும், கிறிஸ்துவின் வசனத்தின் மேலும், கிறிஸ்துவின் கிரியைகளின் மேலும் விசுவாசத்தை உண்டாக்கியது. அந்த வார்த்தையிலும் அதை விசுவாசிப்பதிலும் நிலைத்திருந்தால் நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருக்க முடியும் என்று கூறுகின்றார்.
புதிய ஏற்பாட்டின் பகுதிகளில் துவக்கத்தில் பெற்றுக்கொண்டவைகளில் நிலைத்திருக்க கூறப்பட்டுள்ளதை ஆங்காங்கே காணமுடிகின்றது. ஆதி அன்பு, ஆதி விசுவாசம், ஆதியில் கேட்ட வசனத்தில் வேர்கொண்டிருத்தல், ஆதி நம்பிக்கை, ஆதி ஐக்கியம், ஆதி நற்கிரியைகள் போன்றவைகளாகும். இங்கு ஆதியில் கேள்விப்பட்ட விசுவாசத்துக்குரிய வாக்கு குறித்து குறிப்பிடுகின்றார். இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை கவனிக்கிறவன் அவைகளை பழைய ஏற்பாட்டின் பிரமாணங்களோடு சம்பந்தப்படுத்தி இயேசுவே தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகின்றான். விசுவாசத்துக்கும் கிறிஸ்துவின் ஆளுமையை பின்பற்றுவதற்கும் வசனமே முக்கியமாயிருக்கின்றது. வசனத்துக்கு கீழ்படிகின்றவனே பிதாவையும் குமாரனையும் நம்பி அவரில் நிலைத்திருக்க முயற்சிக்கின்றான்.
கர்த்தருடைய வாக்கியங்கள் பிரமாணத்திலிருந்து உண்டான கிருபையின் உபதேசங்கள், பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட மன்னா மற்றும் பனிதுளிகள் ஆகும். இயேசு கிறிஸ்து உபதேசித்தவைகள் யாவும் பிதாவையும், பிதாவின் ஆளுகையையும், பிதாவின் இராஜ்ஜியத்தையுமே விளக்கிக் காண்பித்தது. சொல்லப்படும் வார்த்தையை ஏற்கிறவன் மட்டுமே சொன்னவரையும் ஏற்றுக்கொள்கிறான், சொன்னவரை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்.
ஆதியில் வாக்கியங்களைக் கொண்டு சகலவற்றையும் உண்டாக்கினார். வாக்கியத்தின் சத்தம் மட்டுமே தொனிக்கப்பட்டது. வாக்கியத்தின் வடிவம் காணப்படவில்லை. ஆதி பக்தர்களுக்கு வாக்குதத்தங்கள் அதே வார்த்தையின் பெருந்தொனியாக கொடுக்கப்பட்டது. பின் சந்ததிகளுக்கு வாக்கிய சட்டங்கள் அதே வார்த்தையின் சத்தத்தினாலும், வரி வடிவத்திலும் எழுதியும் கொடுக்கப்பட்டது. இவ்விதம் சத்தமாக – வரி வடிவமாக இருந்த வாக்கு இப்பொழுது இயேசு என்ற மனிதகுமாரனாக வெளிப்பட்டது. வார்த்தை, வாக்குதத்தம், சட்டங்களாக கொடுத்துக்கொண்டிருந்தவர் இயேசு என்ற மனித குமாரனாக வந்ததை எவரொருவர் ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களில் பிதாவும் குமாரனும் ஆவியும் நிலைத்திருக்கின்றனர். கேட்டவர்க்கே பார்த்த வார்த்தையே காணும் இயேசுவாக வந்தார்.
கேள்வி: தேவனுடைய வார்த்தைகளையன்றி வேறு வார்த்தைகளை நாம் பேசினால் இயேசுவை விட்டுவிட்டு வேறு ஒருவரை குறித்து பேசுவதாக கருதப்படாதா?
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:1-3,14.
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. கொலோசேயர் 2:3-7.