பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
He is antichrist who denies the Father and the Son. (1John 2:22)
1John 2:23; 1John 4:3; 1Corinthians 12:2,3; 2John 1:7; Jude 1:4; Proverbs 30:9; Jermiah 5:13; Revelation 2:13; Revelation 3:8.
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. (1 யோவான் 2:22)
1யோவான் 2:23; 1யோவான் 4:3; 1கொரிந்தியர் 12:2,3; 2யோவான் 1:7; யூதா 1:4; நீதிமொழிகள் 30:9; எரேமியா 5:13; வெளி 2:13; வெளி 3:8.
மறுதலிக்கிறான்:
மறுதலித்தல் என்றால் மறுத்தல், ஏற்றுக்கொள்ளாதிருத்தல், நிராகரித்தல், வேண்டாமென்று மறுத்தல், தன்னைதானே நிராகரித்தல் என்று பலவாறாக பொருள்படுகின்றது. பொய்யனாக இருப்பவனே மறுதலிக்கிறவனாகவும் இருக்கிறான். கண்ட இயேசுவை தேவமகன் அல்ல என்று நிராகரித்தவன் அவருடைய தந்தையாம் தேவனையும் தேவனின் குமாரத்துவ செயல்பாட்டையும் மறுதலிக்கிறவனாகவே இருக்கிறான்.
யோவான் 14:1 ல் தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், குமாரனிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்று இயேசு கூறினார். குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இஸ்ராயேலர்கள் ஏற்றுக்கொள்ளாததினால் இஸ்ராயேலர்கள் தேவனுடைய புத்திரர்கள் அல்ல என்றும் பொய்யனாகிய பிசாசின் பிள்ளைகள் என்றும் கண்டித்துணர்த்தியதை யோவான் சுவிசேஷத்தில் காண்கின்றோம். இந்த நிருபத்திலும் அதே உண்மையை தான் குறிப்பிடுகின்றார் யோவான். பிதாவாகிய தேவனையும் குமாரனாகிய கிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்ளாதிருப்பதுவே மறுதலித்தலும் அந்திகிறிஸ்துவின் ஆவியுமாகும் என்று கூறுகின்றார்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று கூறிய இயேசு கிறிஸ்துவின் கூற்றை நிராகரித்து இயேசுவை கழுமரமேற்றி பொய்யனாகிய அந்திகிறிஸ்துவின் கரங்களை வலுப்படுத்தினார்கள் இஸ்ராயேலர். தாராள இறையியல் கொள்கையில் இதே போலொத்த கருத்துக்களை தாராளமாய் விவிலிய கல்லூரிகளில் உலாவவிட்டு பொய்யின் ஆவிகளையும் அந்திகிறிஸ்துவின் ஆவிகளையும் சபைகளில் பெருக செய்துள்ளார்கள்.
உலகையும் அதிலுள்ளவைகளையும் உண்டாக்கிய யெகோவா தேவனை மறுத்து வேறு தெய்வங்களை தங்களுக்கு உண்டாக்கிக்கொள்வதும் பொய்யின் ஆவியின் பண்பேயாகும். அந்தி கிறிஸ்துவின் மிகப்பெரிய ஆயுதம் பொய்யாகும். பாவத்திலிருந்து மீட்பை கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவை நிராகரித்துக்கொண்டு யாகங்களையும், மிருகபலிகளையும் செலுத்தி பிற தெய்வங்களை நாடிச் செல்வதும் அந்திகிறிஸ்துவின் ஆவியேயாகும்.
யெகோவா தேவனையும் அவரால் அனுப்பப்பட்ட அவரின் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் பின்பற்றி வாழ்வதே கிறிஸ்தவ விசுவாசமாகும். கிறிஸ்துவை கொண்டிருக்கின்ற இடத்தில் வேறு நபர்களுக்கும் வேறு சிந்தைகளுக்கும் வேறு பொருட்களுக்கும் இடம் உண்டாக்கிகொடுப்பது மறுதலித்தலாகும். நாம் இத்தகைய செயலில் ஈடுபடாதிருப்போமாக.
புறஜாதியாராகிய நம்மை மீட்பதற்காக பிதாவாகிய தேவன் சித்தம் கொண்டார். அடித்தவரே காயம் ஆற்ற விரும்புகிறார். புறக்கணித்தவரே சேர்த்துக்கொள்ள விரும்புகிறார். இதற்கு வெளியிலிருந்தல்ல தமது தேவத்துவ குடும்பத்திலிருந்தே ஒரே மைந்தன் இயேசுவை பலியாக கொடுத்து இழந்து போனவைகளை மீட்டெடுத்தார். இந்த செயலினிமித்தம் பிதாவையும் குமாரனையும் பரிசுத்த ஆவியையும் பின்தொடர ஊக்குவிக்கப்படுகின்றோம்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்களில் பரிசுத்த ஆவியானவரை வாசம் செய்ய வைத்து பிதாவாகிய தேவனை அப்பா என்று அழைத்து தொழுகை செய்ய வைக்கின்றார். தேவனின் அன்பு, குமாரனின் கீழ்படிதல், பரிசுத்த ஆவியின் நிறைவு ஆகிய மூன்றும் இணைந்து இரட்சிப்பு பூரணமடைகின்றது.
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது. ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். 2தீமோத்தேயு 2:11-19.