சிலுவை கூறும் செய்தி – 5

சிலுவை கூறும் செய்தி – 5.

சிலுவையில் அறையப்பட்ட கர்த்தர்:

வெளி 11:8. அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார்.

லூக்கா 24:7,20; யோவான் 19:17,18; அப்போஸ்தலர் 2:36; அப்போஸ்தலர் 4:10; 1கொரிந்தியர்1:23; 1கொரிந்தியர் 2:2,8; 2கொரிந்தியர் 13:4; கலாத்தியர் 3:1; எபிரெயர் 6:6.

கர்த்தராக சிலுவையில் அறையப்பட்டார்.

கர்த்தர் என்ற சொல் ஆண்டவர், எஜமான் என்று பொருளாகும். பரலோக தேவனை கர்த்தர் என்று விவிலியம் கூறுகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு கர்த்தர் என்ற பெயர் இயேசுவுக்கு சூட்டப்பட்டது. வெளிப்படுத்தல் ஆக்கியோன் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை கர்த்தர் என்று கூறுகின்றார். பவுலோ சிலுவையில் அறையப்பட்ட இயேசு மகிமையின் கர்த்தர் என்று கூறுகின்றார். இயேசு மாம்சத்திலே வெளிப்பட்டார். மாம்சத்தில் வெளிப்பட்டவரை கிறிஸ்துவாகவும், தேவ குமாரனாகவும் கண்டிருந்த சீஷர்கள் இப்பொழுது அவரை கர்த்தாவாக காண்கின்றனர். கர்த்தர் என்ற பெயர் சகலவற்றையும் கொண்டிருப்பவர், சகலவற்றையும் ஆளுகை செய்யும் அதிகாரம் உள்ளவர் என்று விளக்குகின்றது.

எஜமானாக – ஆண்டவராக இருப்பவரை தண்டிக்க இயலாது. அதுபோல மகிமையின் கர்த்தாவாக இருந்த இயேசுவை உலகத்தின் அதிகாரங்கள் தண்டிக்க இயலாது. எல்லா அதிகாரங்களும் அவரிடமிருந்தே உண்டாகின்றது. அப்படியிருக்க, கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்படும்படியாக அடிமையாக பாடுபட்டார் என்று பிலிப்பியரில் பவுல் கூறுகின்றார். அடிக்கப்படும் ஆட்டைப்போலவும், குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் அடிமையை போலும் இயேசு மாறினார். பாவத்தின் அடிமைதனத்துக்குள் கிடப்போரை மீட்பதற்காக அடிமையின் ரூபமெடுத்தார். இயேசு கிறிஸ்து தோற்றத்திலே அடிமையாகவும், உள்ளான தன்மையிலே கர்த்தாவாகவும் காணப்பட்டார். ஆட்சியாளர்களும் இஸ்ராயேலரும் அவரை அடிமையாக கண்டார்கள். அவரை கிறிஸ்துவாக கண்டவர்களும், அவரை விசுவாசித்தவர்களும் அவரை கர்த்தாவாக கண்டார்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை கர்த்தாவாக அங்கீகரித்து நம்மை அவருக்கு கட்டுபடுத்தி வாழ முயற்சிக்கின்றோமா?…

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையே கர்த்தரும் ஆண்டவரும் மீட்பரும் இரட்சகருமாக்கினார் தேவன். அவருக்கு சகலமும் அடங்கியிருக்கும் காலங்கள் வரப்போகின்றது. அவரை சிலுவையில் அறைந்தவர்களே கதறி கண்ணீர்விட்டு புலம்பும் காலங்கள் வரப்போகின்றது. காலம் காலமாக அவரை நம்பிக்கொண்டிருப்பவர்களே மாம்சத்தில் அறையப்பட்ட இயேசுவை கர்த்தாவாக அங்கீகரித்து அவருக்கு அடங்கி வாழுங்கள்.

நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். சகரியா 12:10..

நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். லூக்கா 23:47,48..

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:6-11..

ADD YOUR COMMENT

Powered By Indic IME