பேதுருவும் மற்ற சீஷனும் ஒருமித்து ஓடினார்கள்

பேதுருவும் மற்ற சீஷனும் ஒருமித்து ஓடினார்கள்.

Peter and the other disciple are both ran together. (John 20:3)

Psalms 133:1; Isaiah 11:6; Amos 3:3; John 4:36; Acts 2:44; Galathians 3:28; Ephesians 2:14; 1John 5:7. 

அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். (யோவான் 20:3)

சங்கீதம்133:1; ஏசாயா 11:6; ஆமோஸ் 3:3; யோவான் 4:36; அப்போஸ்தலர் 2:44; கலாத்தியர் 3:28; எபேசியர் 2:14; 1யோவான் 5:7.

ஒருமித்து ஓடினார்கள்:
மரியாளிடமிருந்து கிடைத்த செய்தியை அறிந்த மாத்திரத்தில் இரு சீஷர்களும் கல்லறையிடத்திற்கு போக ஒருமித்து ஓடினார்கள். இதனை ஒரு சாதாரண நிகழ்வாக கருதினாலும் கர்த்தராகிய இயேசுவின் பலத்த கிரியைகளை காண்பதற்கும், கேட்பதற்கும், அறிவிப்பதற்கும், செய்வதற்கும் ஒருமித்த அணுகுமுறை அவசியமானது என்பதை அறிகின்றோம். சீஷர்கள் ஒருமித்து செயல்பட வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவின்  போதனையாகவும் இருந்தது. இரண்டு இரண்டு பேராக அனுப்பி பரீட்சித்து பார்க்கவும் செய்தார் இயேசு. 

இயேசு கிறிஸ்து இருதிறத்தாரையும் ஒன்றாக்கி புதிய சமுதாயம் படைப்பதற்காகவே வந்தார். மொழிகளினாலும், மதங்களினாலும், ஜாதிகளினாலும், நிறங்களினாலும், இனகுழுக்களினாலும் பிரிந்துபோய் கிடந்த மனுமக்களை தமது இரட்சண்ய கிரியை மூலமாகவும், சுவிசேஷத்தின் மூலமாகவும், சபையின் மூலமாகவும் ஒன்றாக்கி ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாக்க விரும்பினார். அதற்காகவே பாடுபட்டார். அவர்களுக்குள் தமது ஆவியை அனுப்பி ஒருமித்து செயல்படும்படியான இசைந்த மனநிலையை உருவாக்கவும் விரும்பினார். பரிசுத்த ஆவியானவர் பிரிந்த உள்ளங்களை ஒன்றிணைக்கும் உயிரோட்டமாவார். 

வரங்களில் வேறுபாடுகள் காணப்பட்டிருந்தாலும், கிரியைகளில் வேறுபாடுகள் காணப்பட்டிருந்தாலும் உபதேசங்களிலும் கனிகளிலும் வேறுபாடுகள் உருவாவதை இயேசுகிறிஸ்துவோ, அவரால் அனுப்பப்பட்ட ஆவியோ விரும்பவில்லை. சபையின் மையமாகிய கிறிஸ்துவை வெவ்வேறு முறைமைகளில் வெளிப்படுத்துவதற்காகவே வரங்களும், கிரியைகளும் தரப்பட்டுள்ளன. ஒருவரும் தங்களில் செயல்படும் வரங்கள் கிரியைகளை கொண்டு தங்களை தங்களுடைய சபையை மட்டுமே மிகைபடுத்திக் கொள்ள அனுமதியில்லை. கிறிஸ்து மட்டுமே காண்பிக்கப்படுகிண்றார். 

பரிசுத்த ஆவியின் திருப்பணிகள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததும், இறுதிவரை நிற்பதுமான பணி எதுவெனில் இயேசு கிறிஸ்துவை காண்பிப்பதும், அவரது சாயலை உருவாக்குவதும், அவரது உபதேசங்களை நிலைநிறுத்துவதுமேயாகும். ஒவ்வொருவரும் இன்னொரு இயேசுவாக மாறி இவ்வுலகை கிறிஸ்துவின் இராஜ்யமாக மாற்றுவதையே பரிசுத்த ஆவி செய்கின்றார். பரிசுத்த ஆவியை வரங்களுக்குள்ளும், கிரியைகளுக்குள்ளும் சுருக்கி போடுவதிலிருந்து வெளிபட்டு கிறிஸ்துவாகிய கனியை கொடுப்பதற்காக பயன்படுத்துவோமெனில் அதுவே ஒன்றிப்பாகும். 
அவர்கள் கல்லறைக்கு நேராக ஒருமித்து ஓடினார்கள். நாமோ பாவகல்லறைகளிலிருந்து மனுகுலத்தை வெளியே கொண்டுவர ஒருமித்து ஓடுவோமாக. 

ஒருமித்து ஓடினவர்கள் ஒருமித்து ஓடினார்களா? இல்லையெனில் பிரிந்து ஓடினார்களா? என்பதை நாளை தியானிப்போமாக. 
ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தߠίமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். 
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். 
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 1யோவான்1:1-8.

ADD YOUR COMMENT

Powered By Indic IME