நிக்கொதேமு வெள்ளைப்போளமும் கரியபோளமும் கொண்டு வந்தார்.
Nicodemus,bringing a mixture of myrrh and aloes,about a hundred pounds. (John 19:39)
John 3:1-21; John 7:50-52; John 12:7; 2Chronicles 16:14; Song 4:6,14; Genesis 50:2; Psalms 45:8.
ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். (யோவான் 19:39)
யோவான் 3:1-21; யோவான் 7:50-52; யோவான் 12:7; 2நாளாகமம் 16:14; உன்னதப்பாட்டு 4:6,14; ஆதியாகமம் 50:2; சங்கீதம் 45:8.
அரும்பெருங்கொடை.
இராக்காலத்தில் இயேசுவிடம் வந்த நிக்கொதேமு மறுபடி இயேசுவின் மரணக்காலத்தில் திரும்ப வந்திருக்கின்றார். மறுபிறப்பை குறித்து அறிந்த இவர் இயேசு கிறிஸ்துவின் அந்தரங்க சீஷனாகவோ, 70 சீஷர்களில் ஒருவராகவோ மாறியிருக்கக்கூடும். யோசேப்போடுகூட உதவி செய்யும்படியாகவும், அவரின் சரீரத்துக்கு தேவையான மரியாதை செய்யும்படியாகவும் தன் முனைப்பு காண்பித்தார். நிக்கொதேமுவின் இந்த செயலை நாம் பின்வருமாறு தியானிக்கின்றோம்…
நிக்கொதேமு….
முதலாவது, இயேசுவின் சரீரத்தின் அடக்கத்திற்கு பேருதவி செய்தார். அவர் செய்த உதவியானது கடமையினிமித்தமல்ல, அன்பினிமித்தமும், பக்தியினிமித்தமுமே. இவர் செய்தவைகளின் மதிப்பீடு, ஏறக்குறைய 34 கிலோ வாசனை திரவியங்களைக் கொண்டு வந்ததாகும். இயேசுவின் முழு சரீரத்திலும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு போதுமானதாயிருந்தது. இவரைபோன்று இக்காலத்தில் இயேசுவின் சரீரமாகிய சபைக்கு உதவி செய்யக்கூடிய பெரிய மனிதர்களை தேவன் ஆங்காங்கு எழுப்பியுள்ளார்.
இரண்டாவது, இயேசுவின் சரீரத்துக்கு செய்த மரியாதையாக அறியமுடிகின்றது. குடும்பத்திலிருந்து வெளியேறிய இயேசுகிறிஸ்து ஒரு சன்னியாசியைப் போல, பரதேசியைப் போல வாழ்ந்தார். அவர் உயிரோடிருக்கும்போது நன்மை பெற்ற ஒருவரும் அவரின் மரணத்தில் காணப்படவில்லை. அதிகாரிகளுக்கு பயந்ததினால் சீஷர்களும் முன்வரவில்லை. யூத சமய சமூகபடி இயேசுவின் உடலுக்கு மரியாதை செய்ய தேவன் இவ்விதமான மனிதர்களை எழுப்பினார். இதைபோன்று இக்காலத்திலும் சபைகளை மதிக்கின்ற – கிறிஸ்தவ தலைவர்களை – கிறிஸ்தவ மக்களை மதிக்கின்ற பெரிய மனிதர்கள் இருக்கின்றார்கள்.
மூன்றாவதாக, இயேசுவின் மரண காலத்தில் எளியவர்கள் அல்ல, வசதி படைத்தவர்களும், கல்வியாளர்களுமே கலந்துக் கொண்டனர். இது ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் ஆகும். இரண்டு வாக்கியங்கள் நிறைவேறியுள்ளன. ஏசாயா 53: 9 ல் அவர் மரித்தபோது ஐசுரியவான்களோடு இருந்தார் என்பதும், ஏசாயா 53:12 ல் அநேகரை – பலவான்களை தமக்கு கொள்ளைபொருளாக பங்கிட்டுக் கொண்டார் என்பதுமாகும். பிறப்பில் எளிய மாட்டுக்கொட்டகைதான். ஆனாலும் கலவிமான்கள் அவரை வணங்கினர். இறப்பில் புதைகுழிதான். ஆனால் ஐசுரியவான்கள் அவரை வணங்கினர். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழும் ஒவ்வொரு பக்திமான்களுக்கும் இந்த பாக்கியம் உண்டு. அவருடைய பணியை உண்மையோடும், உத்தமத்தோடும் செய்கிறவர்களுக்கும் இந்த மேன்மை உண்டு.
இயேசு தன் ஊழியக்காலத்தில் சொன்ன வாக்கியமான யோவான் 12:26 இப்பொழுது நிறைவேறுகிறது. நாமும் அவ்விதமாகவே நடந்துக் கொள்வோமாக.
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா 53:7-12.