இவர் குற்றவாளியாயிராவிட்டால் உம்மிடம் ஒப்புக் கொடுக்க மாட்டோம்

இவர் குற்றவாளியாயிராவிட்டால் உம்மிடம் ஒப்புக் கொடுக்க மாட்டோம்.

They said, If He were not an evildoer,we would not have delivered Him up to you. (John 18:30)

John 19:12; Deu 25:1-3; Job 9:19-21; Proverb 30:10; Jeremiah 2:3; Matthew 7:1,2; Matthew 12:37; Romans 2:1; Romans 14:4,13; James 2:10.

அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். (யோவான் 18:30)

யோவான் 19:12; உபாகமம் 25:1-3; யோபு 9:19-21; நீதிமொழிகள் 30:10; எரேமியா 2:3; மத்தேயு 7:1,2; மத்தேயு 12:37; ரோமர் 2:1; ரோமர் 14:4,13; யாக்கோபு 2:10.

என் பார்வையில் இவர் குற்றவாளி:

இயேசு கிறிஸ்து குற்றவாளியானதினால்தான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று இஸ்ராயேலர்கள் ஒருமிக்க குரல் எழுப்புகின்றனர். இவர்களே இயேசுவை குற்றவாளியாக தீர்மானித்து இவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காகவே பிலாத்துவின் முன்பாக நிறுத்தினர். இவர்களின் ஆலோசனை மன்றத்தில் குற்றவாளியாக தீர்த்திருந்தும் அவருக்கு தண்டனைக் கொடுக்க அதிகாரம் இல்லாததினால் இப்படி செய்தனர். இயேசு குற்றம் செய்தார். பாவம் செய்தார். தவறிழைத்தார். கலகம் விளைவித்தார். பிரமாணத்துக்கு எதிராக பேசினார். மோசேயை அவமதித்தார். தேவாலயத்தை அவமதித்தார். இவைகளெல்லாம் இஸ்ராயேலரின் வாதங்கள் ஆகும்.

வைராக்கியத்திலும், தன் முனைப்பிலும், எதிர்வினையாற்றுவதிலும் இஸ்ராயேலர்கள் எந்த ஜாதி ஜனத்துக்கும் சளைத்தவர்களல்ல. ஆகவேதான் அதிகாரி என்றுகூட பார்க்காமல் குற்றவாளியாயிராவிட்டால் உம்மிடம் கொண்டு வந்திருக்க மாட்டோம் என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இஸ்ராயேலரின் குலமகனாக – குல விளக்காக – இரட்சிப்பாக – தாவீதின் வேராக – கிளையாக வந்த இயேசுவை இஸ்ராயேலர்கள் குற்றவாளியாக பார்ப்பது மனவேதனையாகவுள்ளது. நன்மைகள் செய்தவரை, எளியவர்களை நேசித்தவரை, பாவிகளை மீட்க வந்தவரை மனசாட்சிகூட இல்லாமல் – மனிதாபிமானம் இல்லாமல் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளனர்.

இக்காலத்திலும் நாட்டுக்கு நன்மை செய்த மிஷனெரிகளின் தியாகங்களை குற்ற செயலாக வர்ணித்து கிறிஸ்தவர்களையும், கிறிஸ்துவையும் குற்றவாளிகூண்டில் நிறுத்த வாஞ்சிக்கும் கொடியவர்கள் எங்கும் நிரம்பியுள்ளனர். சட்டங்களையும், நீதிமன்றங்களையும் தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு வளைக்கின்றார்கள். இவர்கள் தங்கள் பார்வையில் தாங்களே குற்றமற்றவர்களாகவும், தேசபக்தர்களாகவும் மற்றுள்ளோர் குற்றவாளிகளாகவும் காண்பிக்க விரும்புகின்றனர்.

நம்மிலும் பலர் நம்மில் உள்ள குற்றங்களை மறைப்பதற்காக பிறர்மீது குற்ற கணைகளை தொடுத்து குற்றமற்றவர்களை குற்றவாளியாக்குகிறோமல்லவா? ஊழியக்காரர்களை குற்றவாளியாக பார்க்கும் கண்கள் சபைகளில் பெருகிவிட்டது. விசுவாசத்தில் உள்ளவர்களை குற்றவாளியாக தூற்றிதிரியும் பழக்கம் தேவ பிள்ளைகளிடம் பெருகி விட்டது.

மற்றவர்களையே குற்றம் சொல்லி நீண்டகாலம் வாழமுடியாது. நாம் சுமத்தும் குற்றமே நம்மை பிறிதொருநாள் குற்றவாளி கூண்டில் நிறுத்தும். மறக்க வேண்டாம்.

யாவரோடும் சமாதானமாயிருப்போம்.

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:10-12.

தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?. தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. ரோமர் 8:32-34.

உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். வெளி12:9-11.

ADD YOUR COMMENT

Powered By Indic IME