நான் வெளியரங்கமாய் பேசினேன், அந்தரங்கத்தில் ஒன்றும் பேசவில்லை

நான் வெளியரங்கமாய் பேசினேன், அந்தரங்கத்தில் ஒன்றும் பேசவில்லை.

I spoke openly to the world,and in secret I have said nothing. (John 18:20)

John 7:14,15,26,28; John 8:2; John 10:23-39; Matthew 4:23; Matthew 9:35; Matthew 21:23-27; Matthew 26:65; Psalm 22:22; Psalm 40:9.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன், ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன், அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. (யோவான் 18:20)

யோவான் 7:14,15,26,28; யோவான் 8:2; யோவான் 10:23-39; மத்தேயு 4:23; மத்தேயு 9:35; மத்தேயு 21:23-27; மத்தேயு 26:65; சங்கீதம் 22:22; சங்கீதம் 40:9.

என் உபதேசம்:

இயேசுவின் உபதேசத்தைக் குறித்து விசாரித்த பிரதான ஆசாரியனுக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கின்ற பதிலே இந்த வசனம் ஆகும். என் பேச்சும், என் பிரசங்கமும் அந்தரங்கமாக இருக்கவும் இல்லை, அந்தரங்கத்தில் மட்டுமே பேசியிருக்கவும் இல்லை என்று இயேசு கூறுகின்றார்.

இயேசுகிறிஸ்துவின் உபதேசமானது வெளியரங்கமாயிருந்தது, உலகத்தில் – பப்ளிக்கில் பப்ளிக்காக பேசினார், ஜெபாலயங்களில் பேசினார், தேவாலயத்தில் பேசினார், எப்பொழுதும் பேசினார். ஆம் இயேசு பேசிக்கொண்டேயிருந்தார். தனது காலங்கள் நெருங்கி வருவதினாலும், பிரசங்கிக்க வேண்டியவைகளில் ஒன்றும் மறைக்காமல் பேசவேண்டியதிருந்ததினாலும் விரைவாக பேசினார். அவருடைய உபதேசத்தை எல்லாரும் கேட்டார்கள். அவரை விரும்பியவர்களும், விரும்பாதவர்களும் கேட்டார்கள்.

இயேசுகிறிஸ்துவின் உபதேசங்கள் யாவுமே பரலோகம் சார்ந்தவைகளாயிருந்தது. பரலோகத்தின் செய்தியை அப்படியே சொல்லியிருந்தால் அது மறைபொருளாயிருந்திருக்கும். ஆனால் பரலோக செய்திகளை பூலோக உவமானங்களைக் கொண்டு விளக்கிக் காண்பித்தார். இவரின் எளிமையான செய்தி படித்தவர்களுக்கு குதர்க்கமாகவும், படிக்காதவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்கிறதாகவும் அமைந்தது. இயேசு ரகசியங்களை பரசியமாக்கினார். யூதர்களோ ரகசியங்களை மேலும் ரகசியமாக்கினர். ஆகையினால் யூதர்களின் உபதேசங்கள் பின்பற்றுவதற்கு கடினமாக இருந்தது. ஆனால் இயேசுவின் பிரசங்கமோ எளிமையாகவும், எளியோரை ஈர்க்கின்றதாகவும் இருந்தது.

இயேசுவை இறையியல் வார்த்தைகளைக் கொண்டோ, தத்துவம் உளவியல் விஞ்ஞான வார்த்தைகளை கொண்டோ, பிறசமய கருத்துக்களை ஒப்பிட்டோ அறிவிக்க வேண்டியதில்லை. பரிசுத்த ஆவியை கொண்டுள்ள எந்த மனதிலும் இயேசுவை சுவிசேஷங்கள் காட்டுகிறவண்ணமாக எளிமையாக காண்பித்தாலோ, பிரசங்கித்தாலோ போதுமானது. இயேசுவை அறியாதோர் கடினமான உபதேசங்களினால் நொறுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆழ்நிலை ஞானங்கள் அல்ல, அவர்களின் அடிமனம் தொடப்படும்படியான எளிமையான சத்தியங்களை கூறினால் போதுமானதே.

சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுபோகிறவர்களுக்கு பைத்தியமாகவோ, இடறல் உண்டாக்குகிறதாகவோ காணப்படும். இரட்சிக்கப்படுகிறவர்களுக்கோ தேவ ஞானமாகவே காணப்படும்.

ஆழமான சத்தியங்களை எளிமையாக யாவரும் புரிந்து கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படியாக பிரசங்கித்தாலே போதுமானது. எளிமையான குணம் அல்லாது இயேசுவின் எளிய உபதேசத்தை பிரசங்கிக்க இயலாது.

சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?

எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.

சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.

அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். 1கொரிந்தியர் 1:17-24. 26-32.

ADD YOUR COMMENT

Powered By Indic IME