வெளியே நின்ற பேதுருவை யோவான் உள்ளே அழைத்து வந்தான்.
Peter stood at the door outside. Then the other disciple brought Peter in. (John 18:16)
Exodus 38:8; Matthew 26:56,58,69; Mark 14:54; John 13:38; John 18:17; Act 4:13; Genesis 24:31.
பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். (யோவான் 18:16)
யாத்திராகமம் 38:8; மத்தேயு 26:56,58,69; மாற்கு 14:54; யோவான் 13:38; யோவான் 18:17; அப்போஸ்தலர் 4:13; ஆதியாகமம் 24:31.
வெளியே… உள்ளே..
இந்த பகுதியை நாம் வாசிக்கும்போது பேதுருவின் இயலாமையையும், யோவானின் அங்கீகாரத்துவத்தையும் அறியமுடிகின்றது. மற்ற சீஷனின் பரிச்சயம் பேதுருவுக்கு புது வாசலை திறந்துக் கொடுத்தது. வெளியே நின்றிருந்த பேதுருவுக்கு உள்ளே செல்லும் பாக்கியம் கிடைத்தது. அரசாங்க உத்தியோகஸ்தர்களோடு கூடிய பரிச்சயம் இயேசுவின் வேதனையையும், தீர்ப்பிடப்படுதலையும், துன்பத்தையும் பார்ப்பதற்கே பயன்பட்டது. பிற்காலங்களில் பிறரின் பரிச்சயத்தைக் கொண்டு அனுதாபம் தேடிக்கொள்வதை விடவும் தேவனுடைய உதவியை பெறுவதிலும், துன்பத்தை சந்தோஷமாக அனுபவிப்பதிலும் பிரியம் கொள்ள வைத்தது.
மனிதர்கள், அரசியலாளர்கள், ஆட்சியாளர்கள், அரசு அலுவலர்கள் போன்றோரின் ஒத்தாசையைப் பெற்றுக்கொள்வதில் கிறிஸ்து உடன்படவில்லை. இதனால் நாம் இவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று கூறவில்லை. அவர்கள் வழி வேறு, நாம் ஓடுகின்ற பாதை வேறு. எனவே தூரமாக விலகிச் செல்வதில் தவறில்லை.
நாம் வெளியே தள்ளப்படுவதைக் குறித்தோ, வேண்டாமென்று ஒதுக்கிவைக்கப்படுவதை குறித்தோ, பிறரால் வெறுக்கப்படுவதைக் குறித்தோ கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி அனுதாபம் பெற வேண்டியதுமில்லை. தாவீது சொன்னதுபோல நான் வெறுக்கப்பட வேண்டும், வெளியேற்றப்பட வேண்டுமென்றும், தேவன் அவர்களுக்கு சொன்னார். ஆகையினால் அவர்கள் செய்தார்கள். இதனால் நான் அவர்களை பகைப்பதற்கு பதிலாக என்னை வெளியேற்ற அனுமதித்த என் தேவனிடமே பரிகாரம் தேடிச் செல்வது நல்லதல்லவா? ஆம் நமக்கு தீமை செய்கிறவர்களின் பலம், ஞானம், ஆதரவுகோல் அதிகமாக இருக்கும்போது நாம் ஒன்றில் மறைந்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் மௌனமாயிருக்க வேண்டும்.
நாம் மறைந்துக் கொள்வதினாலும், மௌனமாயிருப்பதினாலும் நமது பெலன், ஞானம், தேவ ஒத்தாசை அதிகரிக்கின்றது. நமக்கு உண்டாகும் இந்த மாற்றம் அவர்களுக்குள் குறைவை உண்டாக்கும். குறைவு அதிகரித்து வீழ்ந்துபோகும் நேரம் தேவன் நம்மை எழுப்புகிறார். துன்மார்க்கர் வீழும்போது நீதிமான்கள் கெம்பீரிப்பார்கள்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது கிறிஸ்துவை மட்டுமே மையமாகக் கொண்டது. பழைய ஏற்பாட்டு பக்தர்களை மையமாகக் கொண்டதல்ல. பரிகாரங்களையும், விடுதலையையும் கிறிஸ்துவில் மட்டுமே தேடும்படியாக நம்மை நாம் பழக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
வெளியே நிற்க வைக்கப்பட்ட நாம் உள்ளே போக ஆசைக் கொள்ள வேண்டாம், உள்ளே அமர வைக்கப்பட்ட நாம் வெளியே போக பிரயாசப்பட வேண்டாம்.
கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:12-19.