உம் சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்

உம் சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்.

Sanctify them by Your truth. Your word is truth. (John 17:17)

John 8:40; Ephesians 4:21; 2 Timothy 2:25,26; 2 Samuel 7:28; Psalm 12:6; Psalm 19:7-13; Psalm 119:144,151,152; 1Peter 1:22,23; James 1:21-25.

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம். (யோவான் 17:17)

யோவான் 8:40; எபேசியர் 4:21; 2தீமோத்தேயு 2:25,26; 2சாமுவேல் 7:28; சங்கீதம் 12:6; சங்கீதம் 19:7-13; சங்கீதம் 119:144,151,152; 1பேதுரு 1:22,23; யாக்கோபு 1:21-25.

வசனமே சத்தியம்:

தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தை நீங்கள் அறிந்தால், உணர்ந்தால், ஏற்றுக் கொண்டால் விடுதலையாவீர்கள் என்றும் இயேசு கூறினார். தான் கூறிய தேவனுடைய வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவரும் எடுத்துக்கூறி விளக்கிக்காட்டுவார் என்றும் கூறினார் இயேசு. தேவனுடைய வார்த்தைகளில் பிரமாணங்களும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியுள்ளன. மூன்றாவதாக, கிறிஸ்துவும் அடங்கியிருக்கிறார். தேவனுடைய வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்து பூமியிலே வாசம் செய்தார். தேவனுடைய வார்த்தைகளையும் இயேசு பேசினார். தேவனுடைய வார்த்தையாகிய தம்மை குறித்தும் பேசினார். இதனால்தான் தேவனிடத்திலும், தன்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என்று கூறினார். தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறவன் சத்தியவான் ஆகிறான். அந்த சத்தியவான் எவனும் இயேசுவையும் அவரின் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்கிறான்.

தேவனுடைய வார்த்தை சீஷர்களை பரிசுத்தமாக்கும் என்று இயேசு அறிந்து உமது வார்த்தைகளினாலே அவர்களை பரிசுத்தமாக்கும் என்று வேண்டுகிறார். வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிருக்கிறது. அது மாம்சத்தையும் அதன் கிரியைகளையும் நமது ஆன்மாவிலிருந்தும், சிந்தையிலிருந்தும், சரீரத்திலிருந்தும் வேரறுத்து நம்மை சுத்தமாக்கும் ஆற்றலுள்ளதாயிருக்கிறது. தேவனும் வார்த்தையை கொண்டே கிரியை செய்கிறார். கிறிஸ்துவும் வார்த்தையை கொண்டே கிரியை செய்கிறார். பரிசுத்த ஆவியும் வார்த்தையை கொண்டே கிரியை செய்கிறார். வார்த்தையினால் உண்டாகிற தூய்மைப்படுதலே கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளமாயிருக்கிறது.

வார்த்தைகள் எதனைக் குறிக்கின்றது? வார்த்தைகள் கிறிஸ்துவின் பிரமாணங்களைக் குறிக்கின்றது. கிறிஸ்துவின் பிரமாணங்கள் நமக்குள் தூய்மைப்படுதலை உண்டாக்கி மாயமற்ற விசுவாசத்தை உண்டாக்குகிறது. மாயமற்ற விசுவாசத்தின் பலனே அன்பு ஆகும். 1தீமோத்தேயு 1:5. யோசேப்பை புடமிட்ட வசனம் நம்மையும் புடமிட வேண்டும். பெந்தகோஸ்தே அன்று கர்த்தரின் வசனமே கூடி வந்தவர்களை புடமிட்டு, இருதயத்தை குத்தி மனந்திரும்புதலை உண்டாக்கியது.

நம்மில் வசனம் கிரியை செய்து உள்ளான மனந்திரும்புதலை உருவாக்கவில்லையெனில் அது துர்மனசாட்சியாகவே காணப்படும்.

நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2தீமோத்தேயு 3:14-17.

ADD YOUR COMMENT

Powered By Indic IME