உண்மை தேவனையும், கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்
And this is eternal life, that they may know You, the only true God, and Jesus Christ whom You have sent. (John 17:3)
John 14:9,10; 1Corinthians 8:4; 1Thes 1:9; 1 Timothy 6:15,16; Mark 9:37; 1John 4:14,15; 1John 5:11,12,20.
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17:3)
யோவான் 14:9,10; 1கொரிந்தியர் 8:4; 1தெசலோனிக்கேயர் 1:9; 1தீமோத்தேயு 6:15,16; மாற்கு 9:37; 1யோவான் 4:14,15; 1யோவான் 5:11,12,20.
நித்திய ஜீவன்:
மிகவும் எளிமையாக சொல்லப்போனால் அழிவில்லாத வாழ்வு ஆகும். நாம் வாழும் வாழ்வு அழிவுக்கு வைக்கப்பட்டுள்ளது. காணப்படுகிறவைகள் யாவும் அழிவுக்குரியது. நமது ஜீவனும் நிலையானது அல்ல. உலகமே நிலையற்றிருக்கும்போது ஜீவன் மட்டும் எப்படி நிலையாயிருக்கும். இந்த இக்காட்டான வாழ்வு காலத்தில் ஜீவனைக் கொடுத்தவரும், ஜீவனை சிருஷ்டிக்கிறவருமாகிய தேவனை நாம் அறியவேண்டியவர்களாயுள்ளோம். யோவான் அப்போஸ்தலன் இந்த அழிவில்லாத ஜீவனைப் பெறுவதற்கான சில வழிகளை இவ்வசனத்தில் விவரித்திருக்கின்றார்.
முதலாவது, நமது ஜீவனை நாம் இயற்கையிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளவில்லை. சிருஷ்டி கர்த்தாவிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறோம். நமது ஜீவன் இயற்கையோடு இணைந்திருக்கிறது உண்மைதான். இயற்கையை உண்டாக்கிய தேவனே நமது ஜீவனையும் உண்டாக்கியிருக்கின்றார். அதனை மனிதபிறப்புகளினிமித்தம் வடிவமைத்துள்ளார். வேறு வழி இல்லை. அவருடைய ஜீவனையே நாம் பெற்றிருக்கிறோம்.
2வதாக, படைத்த சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் பல ரூபங்களில், பல வடிவங்களில் வெளிபட்டவரல்ல, ஒரே தேவனாக – யாவேயாக – இஸ்ராயேலின் தேவனாக வெளிப்பட்டுள்ளார். அவரில் பன்மைத்துவம் உண்டா இல்லையா என்று ஆராய வேண்டியதில்லை. அவர் ஒருவரே. ஒரே தேவன் அவரே. அவர் மெய்யான தேவன், ஜீவனுள்ள தேவன், உன்னத தேவன்.
3 வதாக, பாவத்தினால் தேவனுடைய ஜீவனை இழந்துபோன மனுகுலம் மரணத்துக்கு நேராக – அழிவுக்கு நேராக பயணிப்பதை தடுப்பதற்காக காலம் நிறைவேறினபோது ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும், நியாய பிரமாணத்துக்கு உட்பட்டவருமாகிய ஒரே பேறான இயேசுவை இந்த உலகிற்கு தேவன் அனுப்பினார். மனுகுலம் இந்த ஜீவனை மறுபடியும் பெறவேண்டுமாயின் இந்த இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இயேசுவை ஒரே தேவனின் குமாரனாகவும், ஒரே தேவனை மெய்யான தேவனாகவும் அறிவதே – புரிந்துகொள்வதே – விசுவாசித்து ஏற்றுக்கொள்வதே அவருடைய ஜீவனை மறுபடியும் பெற்று அழியாமைக்குள் செல்லக்கூடியதாகும்.
அழியும் பொருள் அழிவையும், அழியா ஜீவன் அழியாமையையும் உருவாக்குகிறது.
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. அப்போஸ்தலர் 17:25-27.
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். 1யோவான் 5:10-13,20.