அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள்
In that day you will ask in My name, and I do not say to you that I shall pray the Father for you. (John 16:26)
Daniel 9:23; Zechariah 10:1; Matthew 7:11; Matthew 9:38; Matthew 18:19; Matthew 24:20; Matthew 26:53; Mark 1:40.
அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. (யோவான் 16:26)
தானியேல் 9:23; சகரியா 10:1; மத்தேயு 7:11; மத்தேயு 9:38; மத்தேயு 18:19; மத்தேயு 24:20; மத்தேயு 26:53; மாற்கு 1:40.
அந்த நாளில் வேண்டுதல்:
எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு என்று பிரசங்கி சொல்லியிருப்பதிலும் ஒரு ஞானம் உள்ளது. வேண்டுதல் என்பது கேட்டல், விண்ணப்பித்தல், சொல்லுதல் என்று பொருள்படும். கிறிஸ்துவின் ஊழியக்காராகிய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவோடு இருப்பதினால் அவரிடம் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஆனால் இயேசுகிறிஸ்து அவர்களை விட்டு பிரிந்து போனபின்பு இயேசுவை நோக்கி – இயேசுவின் தந்தையை நோக்கி வேண்டுதல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் சீஷர்கள்.
சீஷர்கள் தங்களை விட்டு பிரிந்து செல்லுகின்ற இயேசுவினிமித்தம் என்ன மனநிலையுடையவர்கள் ஆவார்கள் என்று நாம் ஆராயும்போது அவர்கள் பயமும் திகிலும் நடுக்கமும் உடையவர்களாகவும், பின்வாங்கிச் செல்லும் இருதயமும் உள்ளவர்களாகவும் மாறுவார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு தமது ஆவியாகிய பிதாவின் ஆவியை தேற்றரவாளனாக கொடுக்கும்போது பயந்த மனநிலை மாறி கிறிஸ்துவைக் குறித்த மனநிலையுடையவர்களாக மாறுவார்கள். அப்பொழுது ஆவியின் அகத்தூண்டுதலினால் கர்த்தராகிய இயேசுவினிடம் முறையிடுவார்கள். தங்கள் தேவைகளுக்காய், நன்மைகளுக்காய், பாதுகாப்புக்காய், திருப்பணிக்காய் கிறிஸ்துவினிடம் முறையிடுவார்கள். கிறிஸ்துவோ இந்த முறையிடுதல்கள் யாவையும் தமது தந்தையிடம் விண்ணப்பிப்பார். அப்பொழுது அவர்களுக்கு நன்மையுண்டாகும்.
கிறிஸ்தவர்களாகிய நாம் சுகமாக இருக்கும்போது சங்கீதம் பாடுகிறோம். தேவனை துதிக்கிறோம். செய்த நன்மைகளுக்காய் நன்றி செலுத்துகிறோம். ஆனால் இடுக்கண்களும், துன்பங்களும், வேதனைகளும், இழப்புகளும் உண்டாகும்போது அவரிடம் அழுது புலம்பி மன்றாடுகின்றோம். அவரும் நமது விண்ணப்பத்தைக் கேட்டு நமக்கு இரங்கி நமக்கு நன்மை செய்கிறார். எப்படிப்பட்ட துன்பங்களாயினும் திறந்த இருதயத்தோடு நமது குறைகளையும், பிழைகளையும் அவர் முன்பாக வெளிப்படுத்தி உண்மையான இருதயத்தோடு விண்ணப்பித்தால் நமக்கு நிச்சயமாக நல்ல பலனை தருவார். ஏனெனில் அவர் ஜெபத்தை கேட்கிறவர், பதில் தருகிறவர்.
ஜெபம் என்பது நமது இருதயத்தை திறந்து அவர் முன் வைத்தலாகும்.
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:5-7.