சத்திய ஆவி வரும்போது சத்தியத்துக்குள் நடத்துவார்.
When He, the Spirit of truth, has come, He will guide you into all truth. (John 16:13)
John 14:17; John 15:26; 1John 4:6; John 14:26; 1Corinthians 2:9-13; Ephesians 4:7-15; 1John 2:20,27.
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16:13)
யோவான் 14:17; யோவான் 15:26; 1யோவான் 4:6; யோவான் 14:26; 1கொரிந்தியர் 2:9-13; எபேசியர் 4:7-15; 1யோவான் 2:20,27.
சத்திய ஆவி:
கர்த்தராகிய இயேசு பிதாவினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட எல்லாவற்றையும் அறிவியாததினால் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் அவைகளை அறிவிக்க கடமைபட்டுள்ளார் என்று நம்புவோமாக. பரிசுத்த ஆவியை சத்திய ஆவி என்று அழைக்கின்றார் இயேசு. காரணம் தாம் வெளிப்படுத்திய சத்தியத்தை அறிவிக்கவே அனுப்பப்பட்டவர் ஆவியானவர். இயேசு சத்தியத்தை அறிவித்தார். கூடவே பிதாவையும் அறிவித்தார். ஆவியானவரோ பிதாவையும் குமாரனையும் அறிவிப்பார். இதுவே சத்தியமாகும். பிதாவை நிராகரித்து கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதும், பிதாவையும் குமாரனையும் நிராகரித்து ஆவியைப் பிரசங்கிப்பதும், கிறிஸ்துவை நிராகரித்து ஆவியைப் பிரசங்கிப்பதும் சத்தியமல்ல. பிதாவினால் அனுப்பப்பட்ட இயேசுவையும், இயேசுவை அனுப்பிய பிதாவையும் அறிவதே சத்தியம். அதனை ஆவியானவர் விளக்கி காட்டுவதினால் சத்திய ஆவி எனப்படுகிறார். ஆவியானவர் தம்மை குறித்து பேசாது பிதாவையும் குமாரனையும் குறித்து பேசுவார்.
நம்மில் வாசமாயிருக்கும் ஆவியானவர் தம்மை மகிமைப்படுத்த விரும்பார். பிதாவையும் குமாரனையும் மகிமைப்படுத்துவதையே விரும்புகின்றார். எல்லா வரங்களும் கிரியைகளும் இதனையே செய்கின்றது.
சத்தியத்துக்குள் நடத்தி செல்லும் ஆவியானவர். இவர் சத்திய பாதையை உருவாக்கமாட்டார். ஏற்கனவே போடப்பட்டுள்ள சத்திய பாதையில் நம்மை நடத்துவார். சத்தியத்தை கண்டுபிடிப்பதற்கு நம்மை நடத்தமாட்டார். ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்துக்கு கீழ்படியும்படிக்கே நம்மை நடத்துவார். இயேசுகிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்துக்குள் அப்போஸ்தலர்களை ஆவியானவர் நடத்தி செல்வார். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் காண்கின்றோம்.
விதைக்கப்பட்டு பயிராகியுள்ள சத்தியத்தை மேய்ந்து குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து பிதாவாகிய தேவனை தொழுதுகொண்டு இரட்சிப்பின் பூரணத்துவத்தை அடைய செய்வதற்கே ஆவியானவர் நம்மை நடத்தி செல்கிறார்.
நாம் பிறருக்கு போதிக்கும்படிக்கு நடத்துவதல்ல, போதனைக்கு கீழ்படியும்படிக்கே நடத்துகிறார்.
கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். எபேசியர் 4:7-15.