நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
These things I command you, that you love one another. (John 15:17)
1Samuel 19:2; Proverb 29:27; Mark 9:50; John 13:34; John 15:12; Act 7:26; Romans 12:10; 1Corinthians 16:14; 1Thessalonians 4:9; 1Thessalonians 5:13; Hebrew 13:1; 1John 5:2.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். (யோவான் 15:17)
1சாமுவேல் 19:2; நீதிமொழிகள் 29:27; மாற்கு 9:50; யோவான் 13:34; யோவான் 15:12; அப்போஸ்தலர் 7:26; ரோமர் 12:10; 1கொரிந்தியர் 16:14; 1தெசலோனிக்கேயர் 4:9; 1தெசலோனிக்கேயர் 5:13; எபிரெயர் 13:1; 1யோவான் 5:2.
கற்பிக்கிறேன்:
கற்பிக்கிறேன் என்ற சொல் கட்டளையிடுகிறேன், செய்து நிறைவேற்றும்படியாக கட்டளையிடுகிறேன் என்று பொருளாகின்றது. சங்கீதம் 32:2 ல் நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் என்று ஆண்டவர் கூறுவதாக சங்கீதக்காரன் கூறுகின்றார். மத்தேயு 28:20ல் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்று உயிர்த்த இயேசு சீஷர்களுக்கு கட்டளையிடுகின்றார். பவுல் நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்று கலாத்திய சபைக்கு கலாத்தியர் 1:8 ல் கட்டளையிடுகின்றார். 1யோவான் 1:1 ல் ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று யோவான் குறிப்பிடுகின்றார். பிதா கற்பித்த படியே கிறிஸ்து நடந்தார். கிறிஸ்து கற்பித்தபடியே சீஷர்கள் நடந்தனர். பரிசுத்த ஆவி கற்பித்தபடியே ஆதிசபை நடந்தது. இப்பொழுது பிதாவினாலும் குமாரினாலும் பரிசுத்த ஆவியினாலும், ஆதி சபையினாலும் நம் கையில் தரப்பட்டுள்ள விவிலியம் போதிக்கிறபடியே நாம் நடந்து கொள்ள வேண்டும்.
சபைகள் வேறுபட்டிருந்தாலும் நிர்வாகங்கள் வேறுபட்டிருந்தாலும் உபதேசங்கள் வேறுபடலாகாது. ஒரே உபதேசம் மட்டுமே உண்டு. விவிலியம் கற்பிப்பதுவே அந்த உபதேசம். ஆதியிலிருந்து வருவதும் அதுவே. நாடுகளையும், மொழிகளையும், இனங்ககளையும், கலாச்சாரங்களையும் கடந்து சற்றேனும் மாறாமல் அப்படியே இருந்து வருகிறதுமான உபதேசம் அதுவே. இயேசுவே அதன் மையம். ஆவியே அதன் உயிர். எனவே இந்த விவிலியத்தின் மையமாகிய இயேசு நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்ற கட்டளையை நமக்கு தந்துள்ளார். அன்பை இழக்கலாகாது. பண்பை இழக்கலாகாது. நிறம், மொழி, இனம், நாடு என்று வேறுபட்டிருந்தாலும் உபதேசத்தையும், கிறிஸ்துவையும், அன்பையும் இழக்கலாகாது.
விவாதங்கள் நமக்குள் இருக்க வேண்டியதுதான். ஆனால் பகைமைக்கும், போட்டிகளுக்கும் உரியதாயிராமல் ஆரோக்கியமான விவாதங்ககளாக இருந்து ஒருவரிலொருவர் கற்றுகொள்வதும், கற்பிக்கிறதுமாயிருக்க வேண்டும்.
அன்புகூருகிற கடனேயல்லாமல் வேறொன்றிலும் கடன்படாதிருங்கள்.
ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. கொலோசேயர் 2:4-9.