பிலிப்பு: ஆண்டவரே பிதாவை எங்களுக்கு காண்பியும் அது போதும்.
Philip said to Him, Lord, show us the Father, and it is sufficient for us. (John 14:8)
John 1:13-46; John 6:5-7; John 12:21,22; John 16:25; Matthew 5:8; Revelation 22:3-5; Exodus 33:18-23; Exodus 34:5-7; Job19:25-27; Psalm 17:15; Psalm 63:2.
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான். (யோவான் 14:8)
யோவான் 1:43-46; யோவான் 6:5-7; யோவான் 12:21,22; யோவான் 16:25; மத்தேயு 5:8; வெளி 22:3-5; யாத்திராகமம் 33:18-23; யாத்திராகமம் 34:5-7; யோபு 19:25-27; சங்கீதம் 17:15; சங்கீதம் 63:2.
பிதாவைக் காண வேண்டும்:
பழைய ஏற்பாட்டில் தேவனாகிய கர்த்தர் யெகோவாவாக அறியப்படுகின்றார். பு.ஏ ல் கர்த்தராகிய இயேசுவின் மூலம் தேவனாகிய கர்த்தர் பிதா அல்லது தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இந்த தேவனை – பிதாவை ஒருவரும் கண்டதாக விவிலியம் கூறவில்லை. ஆனால் அவரோடு முகமுகமாக பேசியதாகவும், அவரை தரிசனங்கள் மூலம் தரிசித்ததாகவும், அவரின் உடலுறுப்புகளைக் கண்டதாகவும் பலகுறிப்புகள் விவிலியத்தில் உள்ளன.
தேவனால் படைக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யும் முன்பதாக பிதாவாகிய தேவனைக் கண்டிருக்கக் கூடும். பாவம் உண்டானபோது தேவன் தம்மை காரிருளுக்குள் மறைத்துக் கொண்டதாக விவிலியம் கூறுகின்றது. இதனால் அதன்பின்பு தேவனை ஒருவரும் ஒருக்காலும் காணமுடியாதபடி அமைந்துவிட்டது.
தேவனுடைய மனிதனாகிய மோசே இஸ்ராயேலர் முன்னிலையிலும், எகிப்தியரின் முன்னிலையிலும், ஆரோன் முன்னிலையிலும் தேவனாக காணப்பட்ட போதிலும் , தேவனோடு முகமுகமாக பேசியபோதிலும் 80 நாட்கள் தேவனிடம் காணப்பட்ட போதிலும் தேவனைக் காணவில்லை என்று சாட்சியம் கூறுகின்றார். ஆனால் அவர் கடந்து போனபின்பு அவரை கண்டதாகவும் கூறுகின்றார்.
கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய பிலிப்புவுக்கும் அதே விருப்பம் இருந்தது. அதனால்தான் பிதாவை காண்பிக்கக் கூறினார்.
நாம் பிதாவாகிய தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறோம். (1கொரிந்தியர் 13:12). பிலிப்பு பிதாவைக் காணவில்லை. ஆனால் இயேசுவை கண்டார். நாமோ பிதாவையும் குமாரனையும் காணாமலே அவரை பின்பற்றுகிறோம். நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்து வாழ்வோமெனில் பிதாவையும் கிறிஸ்துவையும் நிச்சயமாய் தரிசிப்போம்.
விசுவாசித்து முன்னேறுவோம்; தரிசித்து அவரோடிருப்போம்.
இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். 2கொரிந்தியர் 5:4-9.