ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
I go to prepare a place for you. (John 14:2)
John 13:33,36; John 17:24; Hebrews 6:20; Hebrews 9:8,23-26; Hebrews 11:16; Revelation 21:2.
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். (யோவான் 14:2)
யோவான் 13:33,36; யோவான் 17:24; எபிரெயர் 6:20; எபிரெயர் 9:8,23-26; எபிரெயர் 11:16; வெளி21:2.
ஆயத்தம் செய்யும் இயேசு:
மனிதனாக அறியப்பட்ட இயேசுகிறிஸ்து பூமியிலிருந்து உண்டானவர் அல்ல, பரலோகத்திலிருந்து உண்டானவர். தேவனால் ஜெநிப்பிக்கப்பட்டவர். பூமிக்குரியவரல்ல, விண்ணுக்குரியவரும் தேவனுக்குரியவருமாய் இருக்கிறார். அவர் இந்த பூமியில் வந்து மனித உள்ளங்களை தேவனுக்கு நேராக திருப்புகிறவராக காணப்பட்டார். அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கும் தேவனிடத்திற்கும் போவதற்கு ஆயத்தமான நேரத்தில் மிக முக்கியமான வாக்குறுதியைக் கொடுக்கிறார். அதாவது உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ண நான் போகிறேன் என்பதாகும்.
பரலோக இராஜ்யம் சமீபித்துள்ளது என்று பிரசங்கத்தை ஆரம்பித்த இயேசு தன் செய்தியின் மூலம் பரலோகத்திற்கு ஆயத்தமான தேவனுடையவர்களை கொண்டு சேர்க்க அதே பரலோக இராஜ்யத்தில் ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ண விரைகிறார்.
விஸ்தீரணமான பரலோக இராஜ்யத்தில் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டவர்களுக்குரிய வாழ்விடம் ஏற்படுத்த விரைகிறார். இரட்சிக்கப்பட்டவர்களுக்கு உலகம் பாத்திரமாக இராதிருப்பதினால் அவர்களுக்குரிய ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய விரைகிறார்.
சுவிசேஷத்தினிமித்தமும், கிறிஸ்துவினிமித்தமும் எல்லாவற்றையும் இழந்து போனவர்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய விரைகிறார். கிறிஸ்துவுக்காய் ஊழியம் செய்து உலகபிரகாரமாக ஒன்றையும் கொண்டிராதவர்க்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய விரைகிறார்.
ஆயத்தம் செய்தபின்பு உயிரோடிக்ருக்கிறவர்களில் இராஜ்ஜியத்துக்குரியவர்களையும், பலிபீடத்தண்டையிலே நீதிக்காய் காத்திருப்பவர்களையும், நீதிமான்களாக வாழ்ந்து எல்லாவற்ரையும் இழந்து தன் ஜீவனையும் வெறுத்து மரித்து போனவர்களையும் தாம் உருவாக்கிய வாசஸ்தலத்தில் கொண்டு சேர்க்க மறுபடியும் வருவார்.
ஆயத்தம் செய்வது வரையிலும் தேவ பிள்ளைகள் நீதி செய்கிறவர்களாகவும் அல்லாதோர் அநீதி செய்கிறவர்களாகவும் தொடர்வர்.
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம். இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2பேதுரு 3:8-14.