நான் எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்
I will draw all peoples to Myself. (John 12:32)
Jn6:44; Jn12:24; Ro5:17-19; 1Tim2:6; Heb2:9; 1Jn2:2; Rev5:9,10; Ps65:2; Isa11:10; Isa45:24; Isa49:6; Isa60:3.
நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். (யோவான் 12:32)
யோவான் 6:44; யோவான் 12:24; ரோமர் 5:17-19; 1தீமோத்தேயு 2:6; எபிரெயர் 2:9; 1யோவான் 2:2; வெளி 5:9,10; சங்கீதம் 65:2; ஏசாயா 11:10; ஏசாயா 45:24; ஏசாயா 49:6; ஏசாயா 60:3.
இழுத்துக்கொள்ளுவேன்:
உள்ளான வல்லமையினால் இழுத்துக்கொள்ளுவதும், நடத்துவதும் ஆகும். மீன்களை வாரிக் கொண்டுவரும் வலையைப்போல கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எல்லா ஜாதியாரையும் எல்லா பாஷைக்காரரையும் எல்லா தேசத்தாரையும் தம்மிடமாய் இழுத்துக்கொள்ளுவார்.
கர்த்தராகிய இயேசு ஊழியம் செய்துவரும்போது சமய தலைவர்கள் அவரை எதிர்த்திருந்தாலும் ஏராளமான ஜனங்கள் அவரை பின்தொடர்ந்து போயினர் என்பதை சுவிசேஷங்கள் கூறுகின்றது.
இயேசுகிறிஸ்துவின் பிறப்பினிமித்தம் தூரகிழக்கு மக்களும் அவரைத் தேடி அவரைக் காணவந்தனர்.
இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் பலர் அவரை எதிர்த்தாலும் அவரது சிலுவை மரணத்தினால் பலர் அவரிடமாய் ஈர்க்கப்பட்டனர்.
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஒளியினால் இழுக்கப்படாத நாடுகளோ, பட்டணங்களோ, கிராமங்களோ இல்லை. 2000 வருடங்களுக்குள்ளாக உலகின் எல்லா பகுதிகளிலும் சுவிசேஷம் பரவியது. சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல ஊழியக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் துன்பப்பட்டிருந்தாலும் திருப்பணியை தொடர்ந்தனர். கொலை செய்யப்பட்டாலும் அவர்கள் சந்ததி தொடர்ந்து முன்னேறினார்கள். இந்த ஆவியின் படைகள் முன்பாக மொழியோ, ஜாதியோ, கலாச்சாரமோ, இனங்களோ, மதங்களோ, கடவுள் மறுப்புகளோ, யுத்தங்களோ எதிர்த்து நின்று ஜெயிக்க முடியவில்லை. இன்றும் சுவிசேஷத்தினால் இழுக்கப்பட்ட ஜனங்கள் சபையில் கூடிவந்து தேவனை தொழுதுக்கொள்ளுகிறார்கள்.
உலகின் கடைசி காலங்களில் கிறிஸ்துவானவர் தமது தூதர்களை அனுப்பி தமது ஜனங்களை தமது ராஜ்யத்துக்குள் இழுத்துக்கொள்ளுவார். எந்த புவி ஈர்ப்பு விசையும் அவர்களை தடுக்க முடியாது. எந்த கண்டுபிடிப்புகளும் அவருடைய இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது.
அன்பானவர்களே இப்பொழுது தமது அன்பின் கயிறாகிய நற்செய்தியின் மூலமாக உங்களை இழுத்துக்கொள்ள விரும்புகின்றார். போராட்டம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், துரோகம், கொலை, வன்முறை போன்றவைகள் நிறைந்த இந்த உலகினின்று உங்களை மீட்டு காக்கும்படி பாசவலையை உங்கள் மேல் வீசுகிறார்.
அவருடைய இழுத்துக்கொள்ளுதல் முற்றுபெற்று அழிவு வருமுன்பாக அவரின் அன்பு கரங்களுக்குள் அடைக்கலம் புகுந்துக் கொள்ளுங்கள். உலகம் உங்களுக்கு துணையாக வராது. உறவுகள் உங்களை அணைக்காது. அணைக்கும் அன்பு கரங்களில் வந்தடைவீராக. வெற்றி உனதாகும்.
என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள். உன்னதப்பாட்டு 1:4.