லாசரு நித்திரையடைந்தான், நான் எழுப்பப்போகிறேன்.
He said to them,Our friend Lazarus sleeps,but I go that I may wake him up. (John 11:11)
Jn11:13,43,44; Jn5:25-29; Mt9:24; Mk5:39; Act7:60; 1Cor11:30; 1Cor15:18,34,51; Eph5:14; 1Thes4:13-15; 1Thes5:10.
இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். (யோவான் 11:11)
யோவான் 11:13,43,44; யோவான் 5:25-29; மத்தேயு 9:24; மாற்கு 5:39; அப்போஸ்தலர் 7:60; 1கொரிந்தியர் 11:30; 1கொரிந்தியர் 15:18,34,51; எபேசியர் 5:14; 1தெசலோனிக்கேயர் 4:13-15; 1தெசலோனிக்கேயர் 5:10.
நித்திரை:
நித்திரையைக் குறித்து மூன்றுவிதமான குறிப்புகள் விவிலியத்தில் காணப்படுகிறது.
மரணமடைந்தவர்களை நித்திரையடைந்தார்கள் என்பர்.
தூங்கிக்கொண்டிருக்கிறவர்களை நித்திரையிலிருக்கிறார்கள் என்பர்.
தெளிந்த புத்தியில்லாதவர்களை – பாவத்தில் தொந்திப்பானவர்களை நித்திரைக்கு ஒப்பாயிருக்கிறார்கள் என்பர்.
இப்பகுதியில் லாசருவின் மரணத்தைக் குறித்தே இயேசு பேசினார் என்பதை 13 ஆம் வசனம் சுட்டிக்காட்டுகின்றது. இயேசு மரணத்தை நித்திரை என்று சொல்லுவதற்கு காரணம் என்ன?
மரணத்தை குறித்த நேரடியான சொல் சீஷர்களின் மனதின் உறுதியை குலைத்துவிடும் என்பதினால் அப்படி கூறியிருக்கலாம்.
என்றாலும் லாசருவின் எழுப்பப்படுதலை மையமாக வைத்தே இயேசு இவ்விதம் கூறினார் என்று நம்ப இடமுண்டாகின்றது.
தாம் சிநேகித்த லாசருவின் மரணத்தை இயேசுகிறிஸ்து ஏற்றுக்கொள்ளவில்லை. லாசரு நீண்ட நாள் வாழவேண்டும் என்றே விரும்பினார் இயேசு. எனவே அவனது மரணத்தை நித்திரைக்கு ஒப்பிட்டு பேசுகின்றார்.
லாசர் மரணதூளில் நித்திரை செய்வதை விரும்பவில்லை. நித்திய ஜீவனுக்கேதுவான வாழ்வில் இணைக்கப்பட வேண்டும் என்றே விரும்பினார்.
தமது அன்புக்குரியவர்களின், நீதிமான்களின் மரணத்தை நித்திரையாகவே கருதுகின்ரறார் இயேசு. இன்றைக்கோ, நாளைக்கோ அவர்கள் எழுப்பப்படுவார்கள்.
இந்த நித்திரையை மரண இளைப்பாறுதல் என்று கூறினாலும் வேதனையில் உண்டான நித்திரை என்பதே சரியானது. ஒருவன் வலிகண்டு மரிக்கிறான். மரித்தவன் பிறருக்கு வலியை விட்டு செல்கிறான். பாசம், நற்கிரியைகளினால் பிறரை பெலப்படுத்திய , உற்சாகப்படுத்திய லாசரு இப்பொழுது பிறருக்கு வலியையும், வேதனையையும் விட்டு செல்கிறான்.
நமது நற்கிரியைகளும், பரிசுத்த ஜீவியமும், விசுவாச வாழ்வும் நம்மை மரணமாகிய நித்திரையினின்று எழுப்பக்கூடியவைகளாய் இருப்பதினால் கிறிஸ்துவுக்குள் நம் வாழ்வை கட்டி எழுப்புவோம்.
கர்த்தாவே உமது பிள்ளைகளின் மரணம் உமக்கு பிரியமாயிருப்பதினால் அவர்களை நீர் மரணதூளில் போடுவதில்லை என்று அறிந்திருக்கிறோம்.