எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது
Now it was the Feast of Dedication in Jerusalem, and it was winter. (John 10:22)
Num7:10,11; 2Kin12:4; 1Chr26:20; 2Chr2:47:9; Neh3:1; Eze43:26; Lev23:1-44; 2Chr29; Ezra6:16-18.
பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது, மாரிகாலமுமாயிருந்தது. (யோவான் 10:22)
எண்ணாகமம் 7:10,11; 2இராஜாக்கள் 12:4; 1நாளாகமம் 26:20; 2நாளாகமம் 2:47:9; நெகேமியா 3:1; எசேக்கியேல் 43:26; லேவியராகமம் 23:1-44; 2நாளாகமம் 29; எஸ்றா 6:16-18.
தேவாலய பிரதிஷ்டை பண்டிகை.
கிமு 164 ல் யூதாஸ் மக்கபேயு என்பவர் இப்பண்டிகையை ஏற்படுத்தினார் என்ற பாரம்பரியம் உண்டு. அதாவது அந்தியோகு எப்பிபேனஸ் என்ற பேரரசன் எருசலேம் தேவாலயத்தில் பாழாக்கும் அருவருப்பை வைத்து அந்நிய வழிபாட்டை ஏற்படுத்தி தேவாலயத்தைத் தீட்டுபடுத்தினான். இவைகளினால் உண்டான மாற்றம் யூதாஸ் மக்கபேயு போன்றவர்களை எழுப்பியது. அவர்களின் அயராத போர் முயற்சியினால் அந்நியர் தோற்கடிக்கப்பட்டு எருசலேம் தேவாலயம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு கிமு 164 டிசம்பர் மாதத்தில் நடந்தது. இதை தொடர்ந்து இந்நாளை தேவாலய பிரதிஷ்டை பண்டிகையாக அனுசரித்து வந்தனர் யூதர்கள். ஆனாலும் யூதாஸ் மக்கபேயு அனுசரித்த இந்த பண்டிகையானது சாலொமோனின் காலத்திலும், எசேக்கியா ராஜாவின் காலத்திலும், எஸ்றாவின் காலத்திலும் நடந்தேறியிருந்ததையும், அதனை மையமாக கொண்டு இவ்விதம் செய்திருக்கக்கூடும் என்றும் நம்ப இடமுண்டாகின்றது.
ஆலயபிரதிஷ்டை பண்டிகையானது இக்காலங்களிலும் பல ஸ்தாபன சபைகளில் நடந்தேறி வருகின்றது. இவ்விதம் வருடந்தோறும் செய்வது தவறு என்று தள்ளிவிட இயலாது. தேவனுக்காய், தேவனுடைய நாமத்தின் மகிமைக்காய் முன்னோர் செய்த நற்கிரியைகளை நினைவுகூர்ந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியோடு தேவனைத் தொழுதுகொள்ளுவதும், கொண்டாடுவதும் தேவையானது என்றே அறிகின்றோம்.
பண்டிகைகள் யாவுமே நற்கிரியைகளின் வெளிப்பாடு ஆகும். ஆசரிப்பதில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் வரலாற்றின் நிகழ்வுகளை ஒருவரும் கொச்சைபடுத்த இயலாது. கிறிஸ்தவம் என்பது கட்டுகதைகளின் சங்கமம் அல்ல. பாரம்பரியமாக அனுசரித்துவரும் வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும். காலாகாலங்களில் தேவன் தமது மக்களிடத்தில் எவ்விதம் கிரியை செய்துள்ளார் என்பதை அறிவிக்கின்றது. சில பாரம்பரியங்கள் நமக்கு ஒவ்வாததாக இருந்தாலும் அவைகள் வரலாற்றின் நிகழ்வுகளாய் இருப்பதினால் வேண்டாமென்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது. இன்று நம்மிடையில் தேவன் செய்யும் காரியங்கள் 1000 வருடங்கள் தாண்டி பாரம்பரியமாக மாறுகின்றது என்பதை மறுக்கவும் முடியாது.
தேவாலய பிரதிஷ்டை பண்டிகைகளை திருச்சபைகளில் நடத்தி சுற்றிலும் உள்ளோருக்கு ஆகாரம் கொடுத்து சுவிசேஷம் அறிவிப்போம்.
கர்த்தாவே நீர் எங்கள் வாழ்வில் செய்துள்ளதை பாரம்பரியம் என்று நாங்கள் ஒதுக்கி தள்ளாமல் அவைகளை நினைவு கூர்ந்து உமக்கு நன்றி செலுத்தி வாழ எங்களுக்கு உதவி செய்யும்.