உமது வீட்டை குறித்து உண்டான பக்தி வைராக்கியம்.
அப்பொழுது, உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். (யோவான் 2:17)
எண்ணாகமம் 25:11,13; 1இராஜாக்கள் 19:10; சங்கீதம் 69:9; சங்கீதம் 119:139; 2கொரிந்தியர் 7:7,11; கலாத்தியர் 1:14; பிலிப்பியர் 3:6; தீத்து 2:14.
இயேசுகிறிஸ்துவின் தேவாலய சுத்திகரிப்பானது அவருக்கு தேவாலயம் கிறித்து உண்டாயிருந்த தெய்வீக நோக்கத்தின் அடிப்படையிலானது. இதனை பக்திவைராக்கியம் என்கிறார் ஆக்கியோன்.
அப்படியானால்,
தேவாலயம் என்பது என்ன?
– அது பிதாவின் பூமிக்குரிய இல்லம் – அவர் தங்கும் வீடு.
– அது தேவனை நோக்கி ஜெபம் செய்கிற, மன்றாடுகிற, விண்ணப்பிக்கிற, கதறுகிற, கண்ணீர்விடுகிற இடம்.
– அது ஆராதனை ஸ்தலம், தொழுகை ஸ்தானம் – தேவனை பணிந்து குனிந்து தொழுகிற இடம்.
– தேவன் தம் மக்களை சந்திக்கிற இடம்.
– தேவன் தம் ஜனங்களை ஆசீர்வதிக்கிற இடம்.
– தேவனின் விருப்பமும், நம் விருப்பமும் ஒன்றாகிற இடம்.
– தேவனுடைய பரிசுத்தம், நீதி, மகிமை, ஞானம், அறிவு, பிரசன்னம், கிருபை வெளிப்படுகிற இடம்.
– தேவன் உலகிற்குரிய நியாய தீர்ப்பை துவங்குகிற இடம்.
– தேவ கோபம் ஆற்றபட்டு தேவன் தம் இரக்கத்தை வெளிபடுத்தும் இடம்.
– தேவன் தம் ஆளுகையை உலகின் மீது வைத்திருக்கிறார் என்பதை அறிந்து விசுவாசத்தை வெளிபடுத்தும் இடம்.
– தேவாலயம் பரிசுத்தவான்கள் கூடுகிற இடம். பரிசுத்தத்தில் வளரக்கூடிய இடம்.
– தேவனுடைய இராஜ்ஜியத்தின் பூமிக்குரிய வெளிப்பாடு.
– ஐக்கியத்தை வெளிப்படுத்துகிற இடம். தேவனோடும், சக விசுவாசிகளோடும் ஐக்கியமாயிருக்கிறோம் என்பதை காட்டும்.
– தேவாலயம் ஒரு ஏதேன். இங்கு அவர் உலாவி தம் ஜனங்கள் இப்பூமியில் செம்மையாக வாழ ஆலோசனை தருகிறார்.
பூமிக்குரிய கூடாரமாகிய எங்கள் சரீரம் இப்பூமியில் உழைத்து களைத்து பிழைக்கின்றது. நாங்கள் வாழ தரப்பட்ட எங்கள் இல்லங்கள் ஆகாமிய கூடாரமாயுள்ளது. எங்கள் உலகம் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது.
எனவே, கர்த்தாவே உமது ஆலயத்தில் நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கும்படி எங்களை திரும்ப உயிர்ப்பித்து எங்களை உம்மோடு ஒன்றாக்கியதற்காக நன்றி.