விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

4. விசுவாசிக்கு தரப்படும்
சர்வாயுத வர்க்கம் (எபேசி. 6:11, 13-17)

எபேசியர் 6:11 கூறுகிறது: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்”.

வசனம் 13இல் இப்படி வாசிக்கிறோம்:

“ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்”.

இந்த இரண்டு வேதவசனங்களிலும், “சர்வாயுத வர்க்கம்” என்னும் சொல் இடம்பெறுகிறது. ஆவிக்குரிய ஆயுதங்களில் ஒவ்வொரு சிறு பகுதியும்கூட முக்கியமானது, தேவையானது. 11,12 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் சிக்கல்களையும் தாக்குதல்களையும் சந்திக்கச் சர்வாயுத வர்க்கமும் தேவை. “பிசாசின் தந்திரங்களோடு” நாம் போராட்டம் நடத்துகிறோம் (வச.12)

“மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத் தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத் தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு”.

தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் ஒரு விசுவாசி அணிந்துகொண்டால் அவன் சாத்தானிடத்திலிருந்து வரும் எல்லா வகையான தாக்குதல்களையும் தகர்த்தெறிய முடியும். இவ்வுலகில் வளமான வாழ்க்கையைச் சந்தோஷமாய் வாழத் தேவையான அனைத்து நன்மைகளையும் தருவது திரியேக தேவனில் இரண்டாம், மூன்றாம் நபர்களாகும். அவர்கள்தான் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவருமே. பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் விசுவாசிகளுக்குக் கிறிஸ்து விடமிருந்து பெறக்கூடிய நன்மைகளை வெளிப்படுத்திக் காட்டுவதேயாகும் (யோவான் 16:14,15).

எனவே விசுவாசியின் கவனம் முழுவதும் கிறிஸ்துவின் பேரிலேயே திருப்பப்பட்டிருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்படி பரிசுத்த ஆவியானவர் தூண்டி வழிகாட்டுவதால், விசுவாசிகள் ஆவியானவரை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். எபேசியர் நிருபம் முழுவதும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றி வலியுறுத்துகிறது. ஆனால் ஒவ்வொரு விசுவாசியிலும் பரிசுத்த ஆவியானவர் நிறைந்து வாசமாயிருப்பதை எதிர்பார்க்கிறது.

எபேசியர் 2:6-ன்படி பரலோகத்தில் கிறிஸ்துவோடு அமரும் பாக்கியம் பெற்ற நாம் நிறைவான வாழ்க்கை வாழும்படி கிறிஸ்துவானவர் நமக்குத் தந்திருக்கும் நன்மைகளைப் பெற்று அனுபவிக்க வேண்டும்.

நாம் சத்துருவாகிய சாத்தானை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான அனைத்தையும் இயேசுகிறிஸ்து நமக்குத் தந்திருக்கிறார். எனினும் நம் நிலையை விசுவாசத்தினால் காத்துக்கொள்ள வேண்டும். அதாவது நமது முழு நம்பிக்கையும் கிறிஸ்துவின்மேல் இருக்கவேண்டும். அவர் சொல்லியிருப்பவற்றையெல்லாம் செய்ய நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.

எபேசியர் 6:11,13,16 ஆகிய வசனங்களில், நமது எதிரியோடு நமக்குள்ள போராட்டம் குறித்துப் பேசும்போது ‘நிற்கவும்’ ‘நில்லுங்கள்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள். நாம் நம் எதிரியைக் கண்டு ஓடக்கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும். நம்மில் அநேகர் சாத்தானைத் தாண்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவனைவிட்டுச் சில அடி தூரம் தாண்டி நிற்க முடிந்தால் வளமான வாழ்வு வாழ்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனினும் நாம் ஒரு ஆவிக்குரிய நீண்டதூர ஓட்டப் பந்தயத்திற்கு (MARATHON) அழைக்கப்படவில்லை; சாத்தான் நம்மை விட்டு ஓடும்வரைக்கும் அவனை எதிர்த்து உறுதியாக நிமிர்ந்து நிற்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்பொழுது சாத்தான் நம்மைக் கண்டு அஞ்சி ஓடத் தொடங்கிவிடுவான். எனவேதான் யாக்கோபு 4:7 இப்படிக் கூறுகிறது: “தேவனுக்குக் கீழ்ப் படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்”. நாம் சாத்தானுக்கு எதிர்த்து நிற்பதற்கு முன்பாக தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண் டியது அவசியம் என்பதைக் கவனியுங்கள்.

1பேதுரு 5:9 இப்படிக் கூறுகிறது, ஒரு விசுவாசியின் நிலை தன் விசுவாசத்தில் உறுதியாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்பதாகும். பயந்து ஓடுவதல்ல. “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்”. ஏற்கெனவே நமக்குச் சுட்டிக்காட்டியபடி நாம் பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறோம். உபத்திரவ காலத்திலும் விசுவாசிகள் சாத்தானை எதிர்கொள்ளுகிற முறையையும் நாம் பின்பற்ற வேண்டும். “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி.12:11).

இயேசுகிறிஸ்துவோடு நமக்கு உள்ள உறவில் நிலைத்திருக்கும்போது, நாம் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுவோம் (எபே.6:10). இப்படி தேவனுக்குக் கீழ்ப்படிந்திருத்தலில் எபேசியர் 6:11 முதல் 13 வரை உள்ள வசனங்களில் கண்ட காரியங்களுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்.

நாம் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ள வேண்டும் என்று எபே.6:13 கூறுகிறது. தேவன் சர்வாயுத வர்க்கத்தையும் ஆயத்தப்படுத்தித் தந்துள்ளார். நாம் அவற்றை எடுத்துப் பொருத்திக்கொள்ள வேண்டும். தேவன் இஸ்ரவேலருக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்தம் செய்தார். “…உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” (யோசுவா 1:3). ஆனால் இஸ்ரவேலர் அங்கு குடியிருக்கும் மக்களோடு போரிட்டு, வெற்றி கண்டு துரத்தியபின் அந்நிலத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். தேவன் விசுவாசிகளுக்கு வெற்றியை வாக்களித்திருக்கிறார். ஆனால் அவர்கள் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்ள வேண்டும்.

எபேசியர் 6:13ஆம் வசனத்தில் “தரித்துக் கொள்ளுதல்” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் குறித்து, கென்னத் எஸ்.உவெஸ்ட் என்னும் கிரேக்க அறிஞர் இப்படி எழுதியிருக்கிறார். “எடுத்துக்கொள்ளுங்கள்”என்பதன் சொல் “அனலம்பானோ” (analambano) இதன் பொருள்“எடுத்துக்கொள்ளுதல்” “உபயோகப் படுத்துவதற்காக எடுத்துக்கொள்ளுதல்”. இந்த வினைச்சொல் ஒரு கண்டிப்பான கட்டளைச் சொல். இது ஒரு இராணுவத் தளபதியின் கட்டளையில் உள்ள அதிகாரத்தையும் கண்டிப்பையும் கொண்டது. உடனடியாகக் கீழ்ப்படிந்தேயாக வேண்டும். எனவே இந்தக் கட்டளையின்படி விசுவாசி தேவனுடைய சர்வாயு தவர்க்கத்தை எடுத்துத் தரித்துக்கொள்ள வேண்டும்.  இது ஒரே தடவை செய்யப்படும் செயலாகும். இதை அவன் தன் ஆயுள்காலம் முழுவதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும். இது அவனது பாதுகாப்புக்கு எப்போதும் தேவை. இந்தக் கட்டுப்பாட்டை எப்போதும் தளரவிடக் கூடாது.

இதிலிருந்து இந்தச் சர்வாயுதவர்க்கம் ஒரு தடவை அணிந்துகொள்ளுவதற்கும், பின்னர் கழற்றி வைத்துக்கொள்ளுவதற்கும் உரியதல்ல என்று அறிகிறோம். ஆனால் அதை ஒரு தடவை அணிந்துகொண்டால் அப்படியே விட்டுவிட வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவனுக்குப் பாதுகாப்பாய் இருக்கும். இந்தக் கவசம் என்பது ஒரு விசுவாச மனநிலை. எனவே இது விசுவாசியின் சுயசித்தத்தின்படி அணியப்பட்டு, அப்படியே இருக்கட்டும் என்று விடப்படுவதாகும். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் முதிர்ச்சியடையும்போது, நமது வாழ்க்கையின் சில பகுதிகளில் நம்முடைய விசுவாசம் இருக்கவேண்டிய அளவு உறுதியாக இல்லை என்று அறிவோம்.

அதாவது குறிப்பிட்ட சில பகுதிகளில் நம்முடைய கவசம் பலவீனமாயிருக்கிறது என்று பொருள். அப்படிப்பட்ட நேரத்தில் நமது பொறுப்பு, நமது பலவீனமான பகுதிகள் சம்பந்தப்பட்ட தேவ வாக்குத்தத்தங்கள் எவை என்று வேதாகமத்தில் கண்டுபிடித்து, நமது விசுவாசம் பலமடைய வகைசெய்ய வேண்டும்.

ரோமர் 12:1,2 வசனங்கள் நாம் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்வது பற்றித் தெளிவாகக் கூறுகிறது:

“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”.

முதலாவது நாம் சரீரத்தை முழுவதுமாகப் பரிசுத்தமாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். பின்னர் நம்முடைய இருதயமும், உள்ளமும் தேவனைப்பற்றி அறிகிற அறிவினாலே முதிர்ச்சி அடைய வேண்டும்.

இரண்டு வசனங்கள் ஒன்றுக்கொன்று இணையாய் இருப்பதைக் கவனியுங்கள்.

எபேசியர் 6:11: “சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்”

ரோமர் 13:14: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்”.

நமது வாழ்வின் வெற்றிக்குத் தேவன் தந்திருப்பவை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் வேதாகமத்தில் உள்ள தேவனுடைய வார்த்தைகளுமாகும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME