தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்.
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
(1 யோவான் 5:13)
1யோவான் 5:10; 1யோவான் 3:23; 1யோவான் 1:1,2; யோவான் 20:31; யோவான் 21:24; அப்போஸ்தலர் 3:16; அப்போஸ்தலர் 4:12; 2கொரிந்தியர் 5:1; 1தீமோத்தேயு 1:15,16; 1பேதுரு 5:12; 2பேதுரு 1:10,11.
எழுதியிருக்கிறேன்.
வாய்மொழி பாரம்பரியமாயிருந்த சுவிசேஷ செய்தியானது காகிதங்களிலும், தோல் சுருக்களிலும் எழுதப்பட்டு மறுக்கமுடியாததும், மாற்றமுடியாததுமான ஆதாரங்களாக உருவாக்கப்பட்டது. இவையாவும் பரிசுத்த ஆவியானவரின் வேலையேயாகும். தேவனுடைய கைவிரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளை பெற்றுக்கொண்ட மோசேயை கவனிக்கும்போது தேவன் பேசுகிறவர் மட்டுமல்ல, எழுதுகிறவருங்கூட என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனுடைய மனிதன் தேறினவனாக காணப்பட வாயினால் பிரசங்கிக்கிறவனாக மட்டுமல்லாது கைகளினால் எழுதும் ஆற்றலையும், கற்றுக்கொடுக்கும் உபதேச ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும்.
புதிய ஏற்பாடு எழுதப்பட்டதின் நோக்கம் மூன்று நிலைகளைக் கொண்டது. இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்து நம்பி அறிக்கையிட்டவர்கள். அவர்கள் விசுவாசித்து அறிக்கையிட்டதை ஆதாரமூலமாக எழுத்தேடுகளில் எழுதிவைத்தார்கள். எழுதிவைக்கப்பட்டுள்ளதை வாசிக்கிறவனும், கேட்கிறவனும் இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்து அறிக்கையிட வேண்டும். இதற்காகவே எழுதப்பட்டுள்ளது. சுவிசேஷம் இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல, இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறவர்களுக்காகவே எழுதப்பட்டது. விசுவாசித்ததை உறுதிபடுத்திக் காண்பிக்கவே எழுத்தேடுகள் காணப்படுகின்றன. நமது விசுவாசமும் எழுதப்பட்டதின் நோக்கமும் ஒன்றாயிருக்குமானால் நமக்குள் நித்திய ஜீவன் உண்டாயிருக்கும்.
தேவனுடைய மனிதர்களின் எளிய விசுவாசத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்களை உளவியல், தத்துவியல் மற்றும் நூலாராய்ச்சி முறைகளில் ஆய்ந்து கண்டுபிடிக்க முடியாது. ஆவியானவரின் நடத்துதல் படி எழுதப்பட்டுள்ளவைகள் அவருடைய ஆவியானவரை கொண்டு மட்டுமே அறிய இயலும். இயேசுவை உயர்த்திக்காட்டுவதும், அவரின் செய்தியை உணர்த்திக்காட்டுவதுமே ஆவியின் வேலையாகும்.
எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதிருப்போமாக.
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:26..
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். யோவான் 16:13,14..
நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2தீமோ3:14-17…