இயேசு அப்பத்தையும் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.
Jesus came and took bread and gave it to them,and likewise fish. (John 21:13)
Psalms 40:3; Psalms 78:15,24,29; Psalms 105:45; Psalms 106:15; Psalms 111:5,16; Psalm s 135:12; Daniel 1:17; Daniel 5:18; Matthew 10:1; Mark 14:23; Acts 2:45; 1Peter 1:21
அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். (யோவான் 21:13)
சங்கீதம் 40:3; சங்கீதம் 78:15,24,29; சங்கீதம் 105:45; சங்கீதம் 106:15; சங்கீதம் 111:5,16; சங்கீதம் 135:12; தானியேல் 1:17; தானியேல் 5:18; மத்தேயு 10:1; மாற்கு 14:23; அப்போஸ்தலர் 2:45; 1பேதுரு 1:21.
கொடுத்தார்:
சீஷர்கள் யாவரும் கடற்கரை மணலில் உட்கார்ந்தனர். விருந்தின் எஜமானை போல, குடும்ப தலைவனைப்போல அப்பத்தையும், மீனையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து ஆசீர்வதித்து , தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார் இயேசு. இது யூத பாரம்பரியம் மட்டுமல்ல, கிறிஸ்தவ பாரம்பரியமும் கூட. இந்த பகுதியிலிருந்து நாம் அறிந்துக்கொள்ளக்கூடிய சில உண்மைகளை அறிவோமாக.
முதலாவது, இயேசுவின் கட்டளைகளை சுமந்து செல்கின்ற சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து மட்டுமே தலைவராக இருக்கிறார். நன்மை உண்டானாலும், தீமை உண்டானாலும் அவரே தலைவராயிருக்கிறார். அவரை விட்டு விலகிப்போனாலும் அவரே தலைவராயிருக்கிறார். அரவணைப்பதிலும், தேற்றுவதிலும், கொடுத்துதவுவதிலும் அவரே தலைவராக இருக்கிறார். தலைவராக இருப்பவரே துணைவராகவும், போதகராகவும், ஆசிரியராகவும், தகப்பனாகவும், எஜமானாகவும், தாயாகவும் செயல்படுகின்றார். எனவே அவரை பின்தொடரும் சீஷர்கள் எந்த சூழ்நிலையிலும் அவரை விட்டு விலகாதிருப்பது நலமாயிருக்கும்.
இரண்டாவது, தம்மை பின்பற்றுகிறவர்கள் எந்த நிலைமையிலிருந்தாலும் கீழ்படிதலுக்குள் அடங்கியிருக்க கற்றுக்கொள்ள வேண்டும். தலைவன் சீஷனாகவும், வேலைக்காரனாகவும் நடந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தரையிலே உட்காரவைக்கப்பட்டார்கள். சீஷர்கள் இயேசுவுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் கீழ்படிகிறோம் என்பதை தங்களின் அன்றாட பணிகளில் வெளிப்படுத்த வேண்டும். தங்களின் கீழ்படிதலே பிறருக்குள் விசுவாசத்தை தூண்டியெழுப்பும் கருவியாகும். சீஷர்களின் கீழ்படிதலினால் கிறிஸ்துவைப் பின்பற்றும் நல்ல சமுதாயம் உண்டாகும்.
மூன்றாவதாக, இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல் இல்லாமல் சீஷர்களால் கிறிஸ்துவின் பணியை தொடரவோ, பிறருக்கு கொடுக்கவோ, பிறரை நடத்தவோ இயலாது. அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு தக்கதாக தான் சீஷர்களால் சபைக்கு கொடுக்க முடியும். பரலோகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுவதினால் தான் இயேசுவால் கொடுக்க முடிந்தது. ஊழியக்காரர்கள் கிறிஸ்துவிடமிருந்து எதை வாங்குகிறார்களோ அதையே சபைக்கு கொடுக்க வேண்டும். சீஷர்கள் பசியாற உணவு பெற்றுக்கொண்டனர். தராளமான மீன்களை பெற்றுக்கொண்டனர். இனிமேல் இயேசுவிடமிருந்து கிருபையின் வரங்களாகிய தாலந்துகள், திறமைகள், ஞானம், வல்லமை போன்றவைகளை பெற்றுக்கொண்டு சபைக்கு கொடுத்து சபையை வல்லமையின் சரீரமாக மாற்றுவார்கள்.
நான்காவதாக, அவரிடமிருந்து வாங்குகிற எதற்கும் சீஷர்கள் சொந்தக்காரர்களல்ல, எடுத்துக்கொள்ளும்படி கொடுக்கப்படுவதிலும், கொடுக்கும்படி கொடுக்கப்படுவதிலும் எதுவும் தனக்கும் தன் சந்ததிக்கும் சொந்தமானது என்று உரிமை பாராட்ட இயலாது. வாங்குகிறோம், கொடுக்கிறோம். வாங்குகிறோம் பின்சந்ததிக்கு விட்டுப்போகிறோம். இவைகளை ஆதிசபையில் சீஷர்கள் கடைபிடித்தனர், போதித்தனர். இதனால் சபையானது குடும்ப சொத்தாக மாறாமல் தேவனுடையது தேவனுடையதாகவே காணப்பட்டது.
ஐந்தாவது, தேவனுடையதை அனுபவிக்கவோ, ஆளுகை செய்யவோ அனுமதியுண்டு. எடுத்துக்கொள்ள அனுமதியில்லை. ஏனெனில் அழியும் பொருட்கள் யாவும் அக்கினிக்கும், அழியாமையுள்ளவர்கள் எடுத்துக்கொள்ளபடுதலுக்குமாக வைக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையுடனிருப்போமாக.
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார். அப்போஸ்தலர் 17:24-31.